உரிமம் பெற்ற நில அளவையாளர்கள் எங்கே? பட்டா மாறுதலுக்கு காத்திருப்போர் தவிப்பு!
உரிமம் பெற்ற நில அளவையாளர்கள் எங்கே? பட்டா மாறுதலுக்கு காத்திருப்போர் தவிப்பு!
ADDED : அக் 03, 2025 09:43 PM
சென்னை:தமிழகத்தில், உரிமம் பெற்ற தனியார் நில அளவையாளர்கள் குறித்த விபரம் தெரியாததால், பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், அதற் கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இதில் உட்பிரிவு ஏற்படுத்த வேண்டிய நிலையில், நில அளவையாளர்கள் நிலத்தை அளந்து, வரைபடம் தயாரித்து கொடுக்க வேண்டும்.
புதிராக உள்ளது இதற்காக, தாலுகா மற்றும் குறுவட்ட அளவில், நில அளவையாளர்கள் உள்ளனர். பட்டா மாறுதல் விண்ணப்பம் இவர்களிடம் செல்லும்.
ஆனால், தற்போதைய சூழலில், பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ள நிலையில், நில அளவையாளர்கள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.
இதனால், கட்டுமான பொறியியல் பிரிவில், பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு, நில அளவை பயிற்சி அளித்து உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது.
நில அளவை துறை இதற்கான பயிற்சி வகுப்பு களை நடத்தி, உரிமம் கொடுத்து வருகிறது. இதுவரை, 1,300 பேர் உரிமம் பெற்றுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள், அரசின் பல்வேறு துறைகளில் நில அளவை பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், இவர்கள் தனிப்பட்ட முறையிலும் நில அளவை பணிகளை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், நில அளவை பணிக்காக, பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் காத்திருக்கும் நிலையில், உரிமம் பெற்ற நில அளவையாளர்களை, பொதுமக்கள் பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இவர்களை எங்கு, எப்படி அணுகுவது என்பது புதிராக உள்ளது.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பட்டா மாறுதலுக்காக நிலத்தை அளப்பது தொடர்பாக, அதிக விண்ணப்பங்கள் வருகின்றன. குறுவட்டத்துக்கு ஒருவர் என்று இருக்கும் அரசு நில அளவையாளர்களால், இப்பணிகளை முடிக்க கால தாமதமாகிறது.
எனவே, உரிமம் பெற்ற தனியார் நில அளவையாளர்களை பயன்படுத்தி, வரைபடம் தயாரித்து கொண்டு வந்தால், அதை சான்றளித்து, பட்டா மாறுதல் செய்து கொடுக்கப்படும்.
மக்களுக்கு பயன் அதனால், ஒவ்வொரு பகுதிக்கும் உரிமம் பெற்ற நில அளவையாளர் யார் என்ற விபரத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இவர்களது பெயர், உரிம எண், கால அவகாசம் போன்ற விபரங்கள் மட்டுமே, நில அளவை துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுஉள்ளன.
அவர்களது தொடர்பு எண்ணையும் வெளியிட்டால் தான் மக்களால் பயன்படுத்த முடியும்.
அதேபோன்று, தாலுகா அலுவலகங்களிலும் இவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டால், பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.