எண்ணெய், சோப்புக்கான பணம் எங்கே போச்சு? அதிருப்தியில் மாணவர்கள்
எண்ணெய், சோப்புக்கான பணம் எங்கே போச்சு? அதிருப்தியில் மாணவர்கள்
ADDED : ஜன 10, 2025 11:28 PM
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு உட்பட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, 1100க்கும் மேற்பட்ட விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றில் ஒரு லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும் உணவுக்காக நிதி ஒதுக்குவது போல, எண்ணெய், சோப்பு வாங்குவதற்காக கல்லுாரி மாணவருக்கு தலா, 150 ரூபாய், பள்ளி மாணவருக்கு தலா, 100 ரூபாய் வழங்கப்படும்.
இத்தொகை ஒவ்வொரு, 10 மாதங்களுக்கும் கணக்கிட்டு, இரண்டு அல்லது ஒரு தவணையாக சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்தொகை மாணவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. எனவே, இத்தொகை கிடைக்குமா, கிடைக்காதா அல்லது முறைகேடு நடந்துள்ளதா என, மாணவர்களும், பெற்றோரும் குழப்பத்தில் உள்ளனர்.
காப்பாளர்கள் சிலர் கூறியதாவது:
பிற துறை விடுதிகளில் மாணவர்களுக்கான எண்ணெய், சோப்பு பணம் வழங்கப்பட்ட நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறையில் மட்டும் இழுத்தடிக்கப்படுகிறது. கடந்தாண்டு மாவட்டம் வாரியாக ஒதுக்கப்பட்ட இதற்கான மொத்த பணத்தையும், சென்னை அலுவலகத்தில் கேட்டுப் பெற்றனர். இதுவரை அப்பணம் மாணவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை.
இந்தாண்டும் இத்தொகை இதுவரை மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. அதேநேரம் இப்பணத்தை, காப்பாளர்கள் முறைகேடு செய்து விட்டதாக தவறாக விமர்சிக்கப்படுகிறது. எனவே இரண்டு ஆண்டுகளுக்கான தொகையை மாணவர்களுக்கு உடன் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.