பெஞ்சல் புயல் எங்கே? வானிலை ஆய்வு மையம் சொல்வது இதுதான்!
பெஞ்சல் புயல் எங்கே? வானிலை ஆய்வு மையம் சொல்வது இதுதான்!
UPDATED : நவ 30, 2024 05:17 PM
ADDED : நவ 30, 2024 01:15 PM

சென்னை: 'வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவ.,30) மாலை காரைக்கால்- மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே பெஞ்சல் புயல் கரையை கடக்கும்' என தென்னிந்திய வானிலை ஆய்வு மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது: தென் மேற்கு வங்க கடல் பகுதியில், பெஞ்சல் புயல் தற்போது சென்னை தென் கிழக்கே, 90 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே 80 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை காரைக்கால்- மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே புயல் கரையை கடக்கும். மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது கரையை கடக்க துவங்கும் போது மெதுவாக நகரும்.
புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். வட தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்,. இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.