தி.மு.க., எம்.பி., கனிமொழி எங்கே? அண்ணா பல்கலை சம்பவத்தில் மவுனம் ஏன்: குஷ்பு கேள்வி
தி.மு.க., எம்.பி., கனிமொழி எங்கே? அண்ணா பல்கலை சம்பவத்தில் மவுனம் ஏன்: குஷ்பு கேள்வி
ADDED : ஜன 02, 2025 12:12 PM

சென்னை: அண்ணா பல்கலை சம்பவத்தில் தி.மு.க.,வில் இருந்து யாரும் குரல் கொடுக்காதது ஏன்? என்று பா.ஜ., நிர்வாகி குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகி குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது: பாலியல் வன்கொடுமையை அரசியலாக்காதீர்கள். எந்த மாநிலத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் அது பாதிப்பு தான். பெண்கள் பாதிக்கப்பட்டால் கட்சி ரீதியாக சாயம் பூசாதீர்கள். பெண்களை பந்து போல் பயன்படுத்தாதீர்கள்.
அண்ணா பல்கலை வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியின் விபரங்களை வெளியிட்டவர்களை தண்டிக்க வேண்டும்.
தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்த போது, தமிழகத்தில் இருந்து வரும் புகார்கள் கேவலமாக இருந்தன. பெண்களுக்கு எதிரான பிரச்னைகளை கட்சி ரீதியாகவோ குற்றம்சாட்டுவதோ, பிற மாநிலத்தோடு ஒப்பிடுவதோ கூடாது.
ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகளுக்கு போராட்டம் நடத்த அனுமதி கொடுக்கும் போது, எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்காதது ஏன்? சவுமியாவை கைது செய்தது ஏன்?
அண்ணா பல்கலை சம்பவத்தில் தி.மு.க.,வில் இருந்து யாரும் குரல் கொடுக்காதது ஏன்? கனிமொழி எங்கே? தி.மு.க., மகளிர் அணி எங்கே போனது? பா.ஜ., சார்பில் நாளை பேரணி செல்கிறோம், கைது செய்தாலும் பரவாயில்லை. தி.மு.க., சார்பில் ஒரு பெண் அமைச்சர், எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., ஏன் குரல் கொடுக்கவில்லை.
மாநில மகளிர் ஆணையம் ஏதாவது அறிக்கை விட்டாங்களா? ஏதாவது நடவடிக்கை எடுப்பதா சொன்னாங்களா? தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு தமிழகம் வந்த போது, தமிழக மகளிர் ஆணையத்தின் சார்பில் யாரும் உடன் செல்லாதது ஏன்? தமிழக ஆளும் கட்சி என்ன சொல்கிறார்களோ, அதைத் தான் செய்வோம் என்று உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள், எனக் கூறினார்.

