சினிமா 'ரிவ்யூ' எழுதிய முதல்வர் எங்கே இருக்கிறார்: இ.பி.எஸ்., கேள்வி
சினிமா 'ரிவ்யூ' எழுதிய முதல்வர் எங்கே இருக்கிறார்: இ.பி.எஸ்., கேள்வி
ADDED : ஜூன் 29, 2025 02:34 PM

சென்னை: 'ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது' என சினிமா'ரிவ்யூ' எழுதிய தி.மு.க., அரசின் முதல்வர் ஸ்டாலின் எங்கே இருக்கிறார்? என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, போலீசார் அவரிடம் விசாரணை செய்ததாகவும், போலீசாரின் தாக்குதலால் அஜித் குமார் மரணம் அடைந்து விட்டதாகவும், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
'ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது' என சினிமா'ரிவ்யூ' எழுதிய தி.மு.க., அரசின் முதல்வர் ஸ்டாலின் எங்கே இருக்கிறார்? விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது,
சட்டசபையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள்?
இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா? தவறு செய்ததாக போலீசார் கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக போலீசார் எடுத்துக்கொள்ள கூடாது.
தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத முதல்வருக்கு எனது கடும் கண்டனம். முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, முழு விசாரணை நடத்தி, இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க இந்த தி.மு.க., ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.