கொடைக்கானலில் நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்கள் எவை? அறிக்கை கேட்கிறது தீர்ப்பாயம்
கொடைக்கானலில் நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்கள் எவை? அறிக்கை கேட்கிறது தீர்ப்பாயம்
ADDED : அக் 22, 2024 02:32 AM
சென்னை : கொடைக்கானலில் நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களை அடையாளம் கண்டு, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, திண்டுக்கல் மாவட்ட கலெக்டருக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு போன்று, நீலகிரியிலும் பேரிடர் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரியில் கொண்டு வரப்பட்ட, 'மாஸ்டர் பிளான்' சட்டம் மற்றும் ஐகோர்ட் உத்தரவுகளை மீறி, மாவட்டம் முழுதும் நடக்கும் கட்டுமான பணிகள்; நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் கட்டப்படும் கட்டடங்கள்; மண் சரிவுகளை தடுத்து நிறுத்தும் மரங்கள் வெட்டப்படுதல்.
பாறைகளை உடைத்தல் போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன என்று, கடந்த ஜூலை 31ம் தேதி, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்படக்கூடிய இடங்களின் விபரங்களை, அம்மாவட்ட கலெக்டர் அளித்துள்ளார். நீலகிரியை போல திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலும் மலைப்பகுதி.
எனவே, கொடைக்கானலில் நிலச்சரிவால் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் குறித்து ஆய்வு செய்து, அதன் விபரங்களை, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, வரும் ஜனவரி 10ல் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.