இ.சி.ஆரில் 'ஸ்கெட்ச்' போட்ட கார் எது: போலீஸ் விசாரணை
இ.சி.ஆரில் 'ஸ்கெட்ச்' போட்ட கார் எது: போலீஸ் விசாரணை
ADDED : பிப் 04, 2025 11:37 PM
சென்னை:இ.சி.ஆரில், கார் மற்றும் ஜீப்பில் பெண்களை துரத்திய, 'சீட்டிங்' சந்துரு, யமஹா சந்தோஷ் ஆகியோர், 'ஸ்கெட்ச்' போட்ட மற்றொரு கார் யாருடையது என, போலீசார் விசாரிக்கின்றனர்.
கடந்த மாதம் 25ம் தேதி அதிகாலை, 2:00 மணியளவில், சென்னை இ.சி.ஆரில் காரில் சென்ற பெண்களை, 'டாடா சபாரி மற்றும் மஹிந்திரா தார்' ஜீப்பில் துரத்தியது தொடர்பாக, இரும்புலியூரை சேர்ந்த, சீட்டிங் சந்துரு, 26, பீர்க்கங்காரணையைச் சேர்ந்த, 'யமஹா' சந்தோஷ், 28 உட்பட, ஐந்து பேர் கைதாகி உள்ளனர்.
போலீசாரிடம் சந்துரு அளித்த வாக்குமூலத்தில், 'பெண்கள் சென்ற காரை துரத்திப் பிடிக்குமாறு, சந்தோஷ் தான் கூறினார். அதன்படி தான் செயல்பட்டேன். கானத்துாரில் உள்ள வீட்டுக்கு பெண்கள் சென்றதும், திடீரென நான் இந்த காரை பிடிக்கச் சொல்லவில்லை; அந்த பெண்களிடம் மன்னிப்பு கேள் என்றார்; அதன்படி செய்தேன்' எனக் கூறியுள்ளார்.
அப்படியானால், சந்தோஷ் துரத்திப் பிடிக்க சொன்ன கார் யாருடையது என்ற கேள்வி எழுகிறது. அதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சந்துருவுடன் போலீசார் சிலர் நட்புடன் பழகி வந்துள்ளனர். அவர்களுக்கு கார்களை கொடுத்து உதவி செய்துள்ளார்.
சந்தோஷ் மற்றும் சந்துரு ஆகியோர், பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகின்றனர். இதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இ.சி.ஆரில் சென்ற கார் ஒன்றுக்கு சந்தோஷ், 'ஸ்கெட்ச்' போட்டுள்ளார். அதுபற்றி விசாரித்து வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.