கலைமகள் சபா சொத்துக்களில் ஆக்கிரமிப்பில் உள்ளவை எவை? அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
கலைமகள் சபா சொத்துக்களில் ஆக்கிரமிப்பில் உள்ளவை எவை? அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஆக 28, 2025 12:32 AM
சென்னை:'கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்களில், எத்தனை ஆக்கிர மிப்பில் உள்ளன என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்' என, பத்திரப்பதிவு துறை தலைவருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலைமகள் சபா நிறுவனம், 5.33 லட்சம் உறுப்பினர்களிடம் இருந்து, கோடிக்கணக்கில் டிபாசிட் பெற்று, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில், அசையாச் சொத்துக்களை வாங்கி, ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் இறங்கியது.
பின், தொடர் முறைகேடு, தவறான நிதி நிர்வாகத்தால், கலைமகள் சபா பிரச்னையில் சிக்கியது.
சிறப்பு அலுவலர் நிறுவன சொத்துக்களை நிர்வகிக்க, உயர் நீதிமன்றம் நிர்வாகிகளை நியமித்தது. பின், இந்த வழக்கில், கலைமகள் சபா நிர்வாகத்தை எடுத்து நடத்த, உதவி தலைமை பதிவாளர் அந்தஸ்துக்கு குறையாத அலுவலரை, சிறப்பு அலுவலராக நியமிக்க, 2021ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்த வழக்கு, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது.
கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்களை, 33 மாவட்ட கலெக்டர்கள் அடையாளம் கண்டு அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது.
சொத்துக்கள் விபரம் இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''கோவை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் உட்பட ஏழு மாவட்ட கலெக்டர்கள், கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளனர்.
''மேலும் மூன்று மாவட்ட கலெக்டர்கள், அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். மீதமுள்ள மாவட்ட கலெக்டர்கள் தரப்பில், செப்., 3ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்,'' என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்களில், எத்தனை ஆக்கிரமிப்புகளில் உள்ளன, எத்தனை ஆக்கிரமிப்பில் இல்லை என்பது குறித்து, தனித்தனியாக விரிவான அறிக்கைகளை தாக்கல் செய்ய, பத்திரப் பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட்டு, நாளைக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

