துணை ஜனாதிபதி நிகழ்ச்சிக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் யார்? சிக்கியது லேப்டாப்; போலீஸ் விசாரணை துரிதம்
துணை ஜனாதிபதி நிகழ்ச்சிக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் யார்? சிக்கியது லேப்டாப்; போலீஸ் விசாரணை துரிதம்
ADDED : அக் 29, 2025 06:54 AM

கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வுக்கு சற்று நேரத்துக்கு முன், பலத்த பாதுகாப்பையும் மீறி, ஒரு வழிப்பாதையில் ஸ்கூட்டரில் இருவர் அத்துமீறி வந்ததால், பதற்றமான சூழல் உருவானது.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், நேற்று கோவை வந்தார். 'கொடிசியா'வில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றார். அதன் பின், டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகத்தில், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, 2:35க்கு புறப்படுவதாக பயண திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது. மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
அத்துமீறிய இருவர் மதியம் 2 மணிக்கு, டவுன்ஹால் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. துணை ஜனாதிபதி வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், 2:30 மணிக்கு நவாப் ஹக்கீம் சாலையில் இருந்து, ஸ்கூட்டரில் இருவர், ஹெல்மெட் அணியாமல், ஒரு வழிப்பாதையில் அத்துமீறி அதிவேகமாக வந்தனர். போலீசார் தடுக்க முயன்றும் தப்பினர்.
வின்சென்ட் ரோடு சந்திப்பு அருகே சறுக்கி கீழே விழுந்தனர். லேப்-டாப், ஹெல்மெட், நம்பர் பிளேட் போன்றவை கீழே விழுந்தன.
விழுந்த வேகத்தில் எழுந்த அவ்விருவரும், மீண்டும் ஸ்கூட்டரில் திருச்சி ரோட்டில் சென்று தப்பினர். கீழே கிடந்த லேப் டாப்-ஐ போலீசார் கைப்பற்றினர்.
பா.ஜ.வினர் போராட்டம் இச்சம்பவத்தால், மாநகராட்சி அலுவலகம் முன் பதற்றமான சூழல் உருவானது. பாதுகாப்பு குறைபாட்டை கண்டித்து, பா.ஜ.வினர் ரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
'கண்டிக்கிறோம்; கண்டிக்கிறோம்; போலீசாரை கண்டிக்கிறோம். கைது செய், கைது செய், அத்துமீறி நுழைந்தவர்களை கைது செய்' என, கோஷம் எழுப்பினர். இருவரையும் பிடித்து விட்டதாக போலீசார் தெரிவித்ததும், போராட்டத்தை கைவிட்டனர்.பா.ஜ.வினர் கூறுகையில், 'துணை ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. காவல்துறையினர் விசாரித்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
30 நிமிடம் தாமதம் இந்த சம்பவம் காரணமாக, 2:30க்கு வர வேண்டிய துணை ஜனாதிபதி, பிற்பகல் 3:02க்கு வந்தார். மாநகராட்சி அலுவலக வளாகத்தில், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். கட்சியினரை பார்த்து கையசைத்த அவர், நிர்வாகிகளை பார்த்து கைகுலுக்கி, வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். பதற்றம் அடைந்த பாதுகாப்பு படையினர், அருகே யாரும் நெருங்காத அளவுக்கு சுற்றி நின்று கொண்டனர்.
பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக, கட்சியினர் தெரிவித்தபோது, ''பாதுகாப்பு குளறுபடி ஏதுமில்லை. கோவை மக்களே எனக்கு பாதுகாப்பு,'' என, பதிலளித்து விட்டு, காரில் புறப்பட்டுச் சென்றார் துணை ஜனாதிபதி.
பலத்த பாதுகாப்பையும் மீறி வந்த, இரு இளைஞர்களின் பின்னணியை தமிழக போலீசாரும், மத்திய உளவு பிரிவு போலீசாரும் விசாரிக்கின்றனர்.

