பயங்கரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்கள் யார்?
பயங்கரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்கள் யார்?
UPDATED : மே 06, 2025 05:53 AM
ADDED : மே 06, 2025 03:05 AM

சென்னை: ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்டோர் மற்றும் அவர்களின் பின்னால் இருக்கும் முக்கிய புள்ளிகள் குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
காவல் துறையில், மத பழமைவாதிகள், பயங்கரவாத அமைப்புகள் குறித்து, புலனாய்வு தகவல்களை சேகரிக்க, சிறப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவின் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகங்கள், சென்னை, வேலுார், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய எட்டு நகரங்களில் செயல்பட்டு வருகின்றன.
இப்பிரிவு போலீசார், மாநிலம் முழுதும் பயங்கரவாத அமைப்புகளுக்கு துணை போகும் நபர்கள் குறித்து, துப்பு துலக்கி வருகின்றனர்.
அவர்கள் நடத்திய தொடர் விசாரணையில், மாநிலத்தின் பல பகுதிகளில், ஐ.எஸ்., மற்றும் ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என, வெவ்வேறு பெயர்களில் பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருவதை கண்டறிந்தனர். பயங்கரவாத அமைப்பினரால், மூளைச்சலவை செய்யப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணியிலும், தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில், மூளைச்சலவை செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னால் இருக்கும் முக்கிய புள்ளிகள் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
ஐ.எஸ்., மற்றும் ஹிஸ்ப் உத் தஹ்ரீர் உள்ளிட்ட அமைப்பினரால், மூளைச்சலவை செய்யப்பட்ட நபர்களின் பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் குறித்த விசாரணை நடக்கிறது. மூளைச்சலவை செய்யப்பட்ட நபர்கள், அவர்களின் வசிப்பிடம், எப்படி பயங்கரவாத அமைப்பினரிடம் சிக்கினர் என்ற முழு விபரங்கள் திரட்டும் பணி நடக்கிறது.
பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த சந்தேக நபர்களுக்கு, அடைக்கலம் தருவோர் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.