வடசென்னை லோக்சபா தொகுதியில் சலசலப்பு: யார் மனுவை முதலில் வாங்குவது?: வாக்குவாதம்
வடசென்னை லோக்சபா தொகுதியில் சலசலப்பு: யார் மனுவை முதலில் வாங்குவது?: வாக்குவாதம்
ADDED : மார் 25, 2024 01:52 PM

சென்னை: வட சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக - அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய ஒரே நேரத்தில் வந்ததால், தங்களது வேட்புமனுவை தான் முதலில் வாங்க வேண்டும் என திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வடசென்னை லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் மனோ, பா.ஜ., சார்பில் பால் கனகராஜ் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இவர்கள் இன்று (மார்ச் 22) வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக தேர்தல் அதிகாரியிடம் டோக்கன் பெற்றுள்ளனர். அப்போது அதிமுக வேட்பாளர் மனோ உடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக.,வினர் வந்திருந்தனர். அதேநேரத்தில் திமுக வேட்பாளர் கலாநிதி வீரசாமி உடன் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
இரு தரப்பும் ஒரே நேரத்தில் வந்து, எங்கள் மனுவை தான் முதலில் வாங்க வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டனர். அப்போது சேகர்பாபு, 'நாங்கள் தான் முதலில் டோக்கன் (2ம் எண் டோக்கன்) பெற்றோம். எனவே தங்களது வேட்புமனுவை தான் முதலில் வாங்க வேண்டும்' என்றார். குறுக்கிட்ட ஜெயக்குமார், 'நாங்கள் தான் முதலில் வந்தோம். வேட்பாளர் தான் டோக்கன் வாங்க வேண்டும். ஆனால் திமுக.,வை சேர்ந்த வேறொரு நபர் மூலம் டோக்கன் பெற்றது போர்ஜரி. எனவே எங்களது வேட்புமனுவை தான் வாங்க வேண்டும்' என முறையிட்டார். இதனால் இருவர் தரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது.
இதனால் தேர்தல் அதிகாரி யார் மனுவை வாங்குவது என குழப்பமடைந்தார். சில நிமிடங்களுக்கு பின்னர், ''அதிமுக வேட்பாளர் 7வது எண் டோக்கன் பெற்றிருந்தாலும், அவர்கள் தான் முதலில் வந்தது; அதனால் அவர்கள் முதலில் வேட்புமனுவை தாக்கல் செய்ய அனுமதி அளிக்கிறேன்; அதன்பின்னர் திமுக வேட்பாளர் மனுவை தாக்கல் செய்யலாம்'' என்றார். அதிகாரியின் உத்தரவை ஏற்க மறுத்து சேகர்பாபு மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த பிரச்னைக்கு நடுவே, திமுக.,வின் மாற்று வேட்பாளராக கலாநிதி வீராசாமியின் மனைவி ஜெயந்தியின் (5ம் எண் டோக்கன்) வேட்புமனுவை முதலில் பெறுவதாக அதிகாரி தெரிவித்தார். அதன்படி, ஜெயந்தியின் வேட்புமனுவை பெற்ற பின்னர், அதிமுக வேட்பாளர் மனோவின் வேட்புமனு, அதற்கடுத்து திமுக வேட்பாளர் கலாநிதியின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி பெற்றுக்கொண்டார். இதனையடுத்து திமுக - அதிமுக இடையேயான வாக்குவாதம் முடிவுக்கு வந்தது.
புகார்
இதற்கிடையே திமுக அமைச்சர் சேகர்பாபுவின் அழுத்தத்தால் தங்களது வேட்புமனுவை அதிகாரி ஏற்க மறுப்பதாக அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகாரளித்தார்.
பா.ஜ., வேட்பாளர் போராட்டம்
திமுக - அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவை தாக்கல் செய்வதில் பிரச்னை நீடித்த நேரத்தில், பா.ஜ., வேட்பாளர் பால் கனகராஜ் தரப்பும் வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தது. அதே நேரத்தில் அறையில் சேகர்பாபு - ஜெயக்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தநிலையில், பா.ஜ., வேட்பாளரை சிறிது நேரம் காத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதனை ஏற்க மறுத்த பா.ஜ., வேட்பாளர் பால் கனகராஜ் அங்கேயே அமர்ந்து போராட்டம் நடத்தினார். 'திமுக - அதிமுக.,வினருக்காக எங்களை நீண்ட நேரம் காத்திருக்க வைத்திருப்பது என்ன நியாயம்' எனக் கேள்வி எழுப்பினார்.

