புதிய மனைகளுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிப்பது யார்: பதிவுத்துறையில் பஞ்சாயத்து பதிவுத்துறையில் பஞ்சாயத்து
புதிய மனைகளுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிப்பது யார்: பதிவுத்துறையில் பஞ்சாயத்து பதிவுத்துறையில் பஞ்சாயத்து
ADDED : ஜன 20, 2025 05:37 AM

சென்னை : புதிதாக உருவாக்கப்படும் மனைப்பிரிவுகளுக்கு, வழிகாட்டி மதிப்பு நிர்ணயிப்பது யார் என்பது தொடர்பாக, மாவட்ட பதிவாளர்கள் மற்றும் சார் - பதிவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சர்வே எண் வாரியாக, அனைத்து நிலங்களுக்கும் வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், விவசாய நிலங்களை வாங்கி, சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், புதிய மனை பிரிவுகளை உருவாக்குகின்றன.
இவற்றுக்கு நகர், ஊரமைப்பு சட்டப்படி, அங்கீகாரம் பெற்ற பிறகு தான், அதிலுள்ள மனைகளை விற்க முடியும். இவ்வாறு புதிய மனைகள் விற்பனைக்கு வரும் போது, அதில் அடங்கிய சர்வே எண்களுக்கு, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் காலாவதியாகி விடும்.
இதனால், புதிய மனை பிரிவுகளில் விற்பனை துவங்கும் போது, புதிதாக வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். தற்போதைய நடைமுறைப்படி, இதற்கான அதிகாரம் மாவட்ட பதிவாளர் தலைமையிலான குழுவிடம் உள்ளது.
'மாவட்ட பதிவாளர்கள் நிலையில், புதிய வழிகாட்டி மதிப்புகள் நிர்ணயிப்பதில் தாமதம் ஏற்படுவதால், மனைகளை விற்க முடியவில்லை' என, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் புகார் தெரிவித்தன. இதற்கு தீர்வு காண, அந்த அதிகாரத்தை சார் - பதிவாளர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கு மாவட்ட பதிவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய மனை பிரிவுகளுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கும் அதிகாரத்தை, சார் - பதிவாளர்களுக்கே வழங்க, சில மாதங்களுக்கு முன் முடிவு செய்யப்பட்டது. இதற்கான வழிமுறைகளும் தயாரிக்கப்பட்டு வந்தன. இதற்கு மாவட்ட பதிவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சார் - பதிவாளர்கள் மதிப்பு நிர்ணயிக்கும் போது, உள்ளூர் அளவில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் அழுத்தம் ஏற்படும்.
அதனால், பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்றனர். சமீபத்தில் மாவட்ட பதிவாளர்கள், துறை அமைச்சர் மூர்த்தியை சந்தித்து, இது குறித்து வலியுறுத்தினர்.
இதையடுத்து, அந்த அதிகாரம் மாவட்ட பதிவாளர்களிடமே தொடர நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.