நீங்க தயங்குவது ஏன்? உங்களை பாதுகாப்பது யார்? செபி தலைவருக்கு ராகுல் சரமாரி கேள்வி
நீங்க தயங்குவது ஏன்? உங்களை பாதுகாப்பது யார்? செபி தலைவருக்கு ராகுல் சரமாரி கேள்வி
ADDED : அக் 25, 2024 07:11 AM

புதுடில்லி: செபி அமைப்பின் தலைவி மாதவியை பாதுகாக்கும் திட்டத்தின் பின்னணியில் இருப்பது யார்? என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.
பங்கு சந்தையை கட்டுப்படுத்தும், 'செபி' அமைப்பின் தலைவராக இருக்கும் மாதவி புஜ் மீது, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தது. அவர் 'செபி' தலைவராக இருந்துகொண்டே, வேறு சில முக்கிய தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக பணியாற்றி, அதன் வாயிலாக ஆதாயம் அடைந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இவை அனைத்தையும் மாதவி மறுத்து வந்த நிலையில், காங்கிரஸ் மூத்த எம்.பி.,யான கே.சி.வேணுகோபால் தலைமையிலான பார்லிமென்ட் பொது கணக்கு குழு, 'செபி அமைப்பின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு' என்ற தலைப்பில், அதன் தலைவர் என்ற முறையில், சம்மன் அனுப்பியது. பார்லிமென்ட் அலுவலகத்தில் பொது கணக்கு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஆஜராகி விளக்கமளிப்பதை, 'செபி' அமைப்பின் தலைவர் தவிர்த்ததால், பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்து சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள பதிவில், ' பார்லிமென்ட் பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) முன் கேள்விகளுக்கு பதிலளிக்க மாதவி புஜ் ஏன் தயங்குகிறார்? அவரை பாதுகாக்கும் திட்டத்தின் பின்னணியில் இருப்பது யார்? இவ்வாறு ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.

