தமிழகத்தின் கடன் அதிகரிப்புக்கு யார் காரணம்? அமைச்சர்களுடன் அ.தி.மு.க., வாக்குவாதம்
தமிழகத்தின் கடன் அதிகரிப்புக்கு யார் காரணம்? அமைச்சர்களுடன் அ.தி.மு.க., வாக்குவாதம்
ADDED : அக் 16, 2025 11:30 PM
சென்னை: 'தமிழகத்தின் கடன் அதிகரிப்புக்கு யார் காரணம்' என, முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - தங்கமணி: தமிழகத்தின் கடன் அதிகமாகி வருகிறது. தாலிக்கு தங்கம், இலவச 'லேப்-டாப்' உள்ளிட்ட திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசின் வருவாய் குறைந்துள்ளது.
மூலதன செலவு மிக குறைவாகவே செய்யப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. கடன் அதிகரித்துள்ளது. இதனால் விலைவாசி அதிகரிக்கும்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காததால், தமிழகத்தின் நிதிச்சுமை, கடன் அதிகரிக்கிறது. கூட்டணி கட்சியான பா.ஜ.,விடம் சொல்லி, நிதியை பெற்று தாருங்கள்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை கேட்டு, தி.மு.க., கூட்டணியின் 39 எம்.பி.,க்கள் பார் லிமென்டில் அழுத்தம் தர வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின்: தமிழகத்திற்கான நிதியை வழங்கக்கோரி, பார்லிமென்டில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு, தி.மு.க., ஆட்சியை கொடுமைக்கு ஆளாக்க வேண்டும் என்பதற்காக, ஓரவஞ்சனையோடு மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசிடம் அ.தி.மு.க.,வும் குரல் கொடுக்க வேண்டும்.
தங்கம் தென்னரசு: அ.தி.மு.க., ஆட்சியில் வாங்கப்பட்ட கடனுக்கு, 1.40 லட்சம் கோடி ரூபாய் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க., ஆட்சியில் கடன் விகிதம், 128 சதவீதமாக இருந்தது.
இப்போது தி.மு.க., ஆட்சியில் கடன் விகிதம் 93 சதவீதமாக மட்டுமே உள்ளது.
தமிழகத்தின் கடன் அதிகரிப்புக்கு நிதி நிர்வாகம் காரணம் அல்ல. மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையே காரணம்.
தங்கமணி: கடந்த 7 5 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ரூபாய் வாங்கப்பட்டது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 4 லட்சம் கோடி ரூபாய் க டன் வாங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சதவீதத்தை கூறி சாமர்த்தியமாக சமாளிக்கிறார். மத்திய அரசு நிதி கொடுக்க வில்லை என, திரும்ப திரும்ப கூறுகிறார். கொள்கை என்பது வேறு. கொள்கையை அரசியலோடு வைத்துக் கொள்ள வேண்டும். மாநிலத்தின் நலனுக்காக, மத்திய அரசோடு, நல்ல அணுகுமுறையோடு செயல்பட வேண்டும்.
தங்கம் தென்னரசு: அணுகுமுறை என்பது அடமானம் வைத்து விடுவதாக ஆகி விடக்கூடாது.
தங்கமணி: எல்லோருக்கும் தன்மானம் இருக்கிறது. யாருமே அடகு வைக்க மாட்டோம். நீங்கள்தான் தமிழக மக்களை அடகு வைத்து கொண்டிருக்கிறீர்கள்.
இவ்வாறு விவாதம் நடந்தது.