யார் அந்த சார்? ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள்: கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
யார் அந்த சார்? ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள்: கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
UPDATED : ஜன 08, 2025 02:35 PM
ADDED : ஜன 08, 2025 12:37 PM

சென்னை: 'யார் அந்த சார்? என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். உண்மையாக உங்களிடம் அதற்கு ஆதாரம் இருந்தால், அதனை சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் சொல்லுங்கள். இதனை யார் தடுக்க போகிறார்கள்' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து, சட்டசபையில் விவாதம் நடந்தது. அப்போது முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசியதாவது: விவாதத்தின் போது பல்கலைக்கழகம் பெயரை சொல்லி எதிர்க்கட்சியினர் பேசி இருக்கிறார்கள். ஆனால் பல்கலைக்கழக பெயரை சொல்லி களங்கத்தை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்டிருக்கின்ற பாலியல் வன்கொடுமையானது மாபெரும் கொடூரம். இதனை யாராலும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டப்படி நியாயம்
தி.மு.க., ஆட்சி மீது தவறான எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்று சில உறுப்பினர்கள் பேசி இருக்கின்றனர். யாருக்கு எந்த நோக்கம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண் பக்கம் நின்று, அவருக்கு சட்டப்படி நியாயம் பெற்று தரக்கூடியதை தவிர தமிழக அரசுக்கு எந்த நோக்கமும் இல்லை என்பதை தெளிவாக, உறுதியாக, ஆணித்தரமாக சொல்லி கொள்ள விரும்புகிறேன். குற்றம் நடந்த பிறகு, குற்றவாளியை கைது செய்யாமல் விட்டு இருந்தாலோ, குற்றவாளியை காப்பாற்ற முடிவு செய்து இருந்தாலோ, அரசை நீங்கள் குறை சொல்லலாம்.
எப்.ஐ.ஆர்., கசிவு
ஆனால் சில மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த பிறகும், குற்றம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆதாரங்களை திரட்டிய பிறகும் அரசை குறை சொல்வது அரசியல் ஆதாயத்திற்கு தான் தவிர, உண்மையான அக்கறையோடு எதிர்க்கட்சியினர் செயல்படவில்லை என்பதை பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன். இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரனை போலீசார் கைது செய்துள்ளனர். இது போலீசார் எடுத்த, துரிதமான சரியான நடவடிக்கை. இருந்தாலும் எதிர்கட்சிகள் முதல் தகவல் அறிக்கை கசிந்தது தொடர்பாக பேசுகிறார்கள். இதற்கு காரணம் யார்?
மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்பட கூடிய தேசிய தகவல் மையத்தை போலீசார் சுட்டிக்காட்டினர். இது தொடர்பாக அந்த அமைப்பும் விளக்கம் கொடுத்துள்ளது. பாதுகாப்பு இல்லை, கேமராக்கள் இல்லை என்று பொதுவாக கூறும் குற்றச்சாட்டு உண்மையில்லை. சம்பவம் நடந்த வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் உதவி உடன் தான் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்து விட்டு, யார் அந்த சார் என்று கேட்கிறார்கள்.
குண்டர் சட்டம்
ஐகோர்ட் உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக்குழு வன்கொடுமை வழக்கை விசாரிக்கிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்த புலன் விசாரணையில் வேறு யாரும் குற்றவாளிகள் இருப்பதாக தெரியவந்தால், அது யாராக இருந்தாலும் சரி, அவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்கும். இதை இந்த அவைக்கு 100 சதவீதம் உறுதியோடு தெரிவித்து கொள்கிறேன். எந்த மாற்றமும் கிடையாது. அதுமட்டுமல்ல இந்த வழக்கில் முக்கியமானது, 60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போகிறோம்.
சிறப்பு நீதிமன்றம் மூலம், விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்வோம். நான் எதிர்க்கட்சிகளை கேட்க விரும்புகிறேன். யார் அந்த சார்? என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். உண்மையாக உங்களிடம் அதற்கு ஆதாரம் இருந்தால், அதனை சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் சொல்லுங்கள். இதனை யார் தடுக்க போகிறார்கள். அதனை விட்டுவிட்டு சென்சிட்டிவ் விஷயத்தில், வீண் விளம்பத்திற்காக மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம்.
இரும்பு கரம்
இந்த அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்பு கரம் கொண்டு அடங்கும். இந்த ஒரு சம்பவத்தை வைத்து பெண்களுக்கு பாதிப்பு இல்லை என்ற சதி தோற்றத்தை ஏற்படுத்த சிலர் விரும்புகிறார்கள். இது நிச்சயமாக மக்கள் மத்தியில் எடுபடாது. இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான முதல் 10 மாநகரங்களில் கோவையும், சென்னையும் உள்ளன; பெண்கள் அதிகம் வேலைக்குச் செல்லும் மாநிலம் தமிழகம் தான். பெண்களின் பாதுகாவலர்கள் போல் பேசுபவர்கள் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்ததென்று நினைத்துப் பாருங்கள். பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் அ.தி.மு.க.,வினர் என்பது சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்தது; அ.தி.மு.க.,வை நோக்கி 100 சார் கேள்விகளைக் கேட்க முடியும்.
எதிர்க்கட்சியினரை நான் கேட்டு கொள்ள விரும்புவது, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நேர்மையாக, கடுமையாக நடவடிக்கை எடுக்கும் அரசை குறை சொல்லாமல், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க தங்களால் இயன்ற ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அ.தி.மு.க., வெளிநடப்பு
சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். ' விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருக்கும்போதே குற்றவாளி ஒருவர் தான் என்று எப்படி முடிவுக்கு வர முடியும்? பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி போராடிய நாங்கள் கைதானோம்.
நேற்று போராட்டம் நடத்திய தி.மு.க.,வினர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளோம் என்று முதல்வர் பொறுப்பில்லாமல் சொல்கிறார். இது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதைக் கேள்விக்குறியாகியுள்ளது என சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ,., ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.