பள்ளிக்கல்வி முகநுால் பக்க குளறுபடிக்கு காரணம் யார்? போலீஸ் விசாரணையில் புது தகவல்
பள்ளிக்கல்வி முகநுால் பக்க குளறுபடிக்கு காரணம் யார்? போலீஸ் விசாரணையில் புது தகவல்
ADDED : மார் 18, 2024 06:43 AM

சென்னை: பள்ளிக்கல்வியின் முகநுால் பக்கத்தில், சினிமா காட்சிகளை பதிவேற்றிய விவகாரத்தில், தனியார் நிறுவன ஒப்பந்த பணியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் கண்டறிந்துள்ளனர்.
பள்ளிக்கல்வி துறையின் செயல்பாடுகளை, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், 'பேஸ்புக், எக்ஸ், யு டியூப்' போன்ற சமூக வலைதளங்களில், அதிகாரப்பூர்வ பக்கங்கள் துவக்கப்பட்டுள்ளன.
இந்த பக்கங்களின் பராமரிப்பு மற்றும் தகவல் பதிவேற்றும் பணிகளை, தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்கிறது.
சினிமா காட்சிகள்
இந்த நிறுவனத்தின் சார்பில், பல்வேறு ஒப்பந்த பணியாளர்கள், ஆன்லைன் தகவல் பதிவேற்றப் பணிகளுக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ முகநுால் பக்கம், 'ஹேக்' செய்யப்பட்டு, நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த சினிமா காட்சிகள் பதிவேற்றப்பட்டன. இதனால், மாணவர்களும், ஆசிரியர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, ஐ.டி., நிபுணர்கள் உதவியுடன் முகநுால் பக்கம் மீட்கப்பட்டு, அதிலிருந்த சினிமா காட்சிகள் நீக்கப்பட்டன. முகநுால் நிர்வாகத்துக்கும், பள்ளிக்கல்வி தரப்பில், இ - மெயில் வழி புகார் அனுப்பப்பட்டது.
மேலும், சமக்ர சிக் ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகத்தில் இருந்து, சென்னை போலீஸ் கமிஷனரகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், முகநுாலில் மர்ம நபர்கள் ஊடுருவி, சினிமா காட்சிகளை பதிவேற்றுவதற்கு, ஒப்பந்த பணியாளர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
கிரிமிணல் வழக்கு
அதனால், தகவல் பதிவேற்றம் மற்றும் டிஜிட்டல் பணிகளில் இருந்து, ஒப்பந்த பணியாளர்களை நீக்கவும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து, அவர்களை விசாரணை வளையத்தில் கொண்டு வரவும், போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும், மாணவர்களுக்கான சமூக வலைதள பக்கத்தில், சினிமா காட்சிகளை பதிவேற்றியது ஏன்; இதில் ஏதாவது சதித்திட்டம் உள்ளதா என்பதை கண்டறியவும், போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு, மர்ம ஆசாமிகள் இ - மெயில் மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

