புதிய டி.ஜி.பி., யார்?: பட்டியலில் சீமாவுக்கு முதலிடம்
புதிய டி.ஜி.பி., யார்?: பட்டியலில் சீமாவுக்கு முதலிடம்
ADDED : ஆக 07, 2025 05:13 AM

சென்னை: பொறுப்பு டி.ஜி.பி., நியமனம் என்ற பேச்சுக்கே இடமில்லை என, அரசு முடிவு எடுத்துள்ள நிலையில், புதிய டி.ஜி.பி.,க்கான பட்டியலில், தீயணைப்பு துறை இயக்குநர் சீமா அகர்வால் முன்னிலையில் உள்ளார்.
தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி., சங்கர் ஜிவால், இம்மாதம் ஓய்வு பெறுகிறார்.
இதனால், புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய, மூன்று மாதங்களுக்கு முன்பே, டி.ஜி.பி., அந்தஸ்தில் உள்ள சீனியர் ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி இருக்க வேண்டும்.
பதவி நீட்டிப்பு ஆனால், இதற்கான பணியில் மூத்த அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டனர். இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், சங்கர் ஜிவாலுக்கு பதவி நீடிப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
மற்றொரு ஏற்பாடாக, சங்கர் ஜிவாலை முன்னதாகவே விருப்ப ஓய்வு பெற செய்து விட்டு, லஞ்ச ஒழிப்பு துறை டி.ஜி.பி.,யாக உள்ள அபய்குமார் சிங்கை பொறுப்பு டி.ஜி.பி.,யாக நியமனம் செய்யும் முயற்சி நடந்து வருவதாகவும், காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு தடை போடும் விதமாக, புதிய டி.ஜி.பி.,க்கான தேர்வு பட்டியலில் உள்ள, ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவரின் பின்னணியில், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம், புதிய டி.ஜி.பி., நியமனத்தில் குளறுபடி நடந்தால், அதில் நீதிமன்றம் தலையிடும் என்று எச்சரித்தது.
இந்நிலையில், பொறுப்பு டி.ஜி.பி., நியமனம் என்ற பேச்சுக்கே இடமில்லை என, அரசு முடிவு செய்துள்ளது. இதனால், புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்யும் பணி வேகம் எடுக்க துவங்கி உள்ளது.
புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான, சீனியர் ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பட்டியல், முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
எட்டு பேர் இப்பட்டியலில், தீயணைப்பு துறை இயக்குநர் சீமா அகர்வால், ஆவின் விஜிலன்ஸ் முதன்மை அதிகாரி ராஜிவ்குமார் மற்றும் காவல் உயர் பயிற்சியக டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோட் உள்ளிட்ட எட்டு பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இப்பட்டியலை இ றுதி செய்து, மத்திய அரசுக்கு அனுப்பும் நடவடிக்கை துவங்கியுள்ளது. புதிய டி.ஜி.பி.,க்கான போட்டியில், சீமா அகர்வால், ராஜிவ்குமார் மற்றும் சந்தீப்ராய் ரத்தோட் முன்னணியில் உள்ளனர்.
இவர்களில் சீமா அகர்வாலுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக, டி.ஜி.பி., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.