ADDED : பிப் 26, 2024 02:22 AM

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக், 36. இவர், சென்னை புரசைவாக்கத்தில் விடுதி வைத்து நடத்துகிறார். பிரபல அசைவ ஹோட்டல் ஒன்றின் புரசைவாக்கம் கிளையையும் எடுத்து நடத்தும் சாதிக், தி.மு.க., முக்கிய தலைவர்கள் பலருடன் நெருக்கமான நட்பில் இருந்தார்.
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க.,வின் முக்கிய புள்ளி வாயிலாக, கட்சியின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் பதவியை பெற்ற சாதிக், கட்சி மேலிடத்தில் இருப்போர் பலருடனும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
ஒரு கட்டத்தில் திரைத் துறையில் காலடி எடுத்து வைத்த சாதிக், அங்கிருக்கும் பிரபலமான நபர்களுடனும் நெருக்கமான நட்பை வளர்த்துக் கொண்டார்; திரைப்படம் தயாரிக்கும் பணியிலும் இறங்கினார்.
மங்கை என்ற திரைப்படம் எடுத்து வரும் அவர், படத்துக்கான முதல் பாடல் வெளியீட்டு விழாவுக்கு, இயக்குனர் கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட தி.மு.க., பிரபலங்களையும் அழைத்திருந்தார்.
கட்சிக்கும், ஆட்சிக்கும் பல கட்டங்களில் தாராளமாக நிதி வழங்கியதால், ஜாபர் சாதிக்குக்கு அனைத்து மட்டங்களிலும் தொடர் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

