ADDED : ஜூன் 05, 2024 02:12 PM

சென்னை: தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகளில் அதிக ஓட்டுகளை பெற்ற வேட்பாளர், குறைவான ஓட்டுகளை பெற்ற வேட்பாளர் மற்றும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர், குறைவான ஓட்டு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று (ஜூன் 4) வெளியானது. அதில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிப்பெற்றது. இதில் பல தொகுதிகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட காங்., வேட்பாளர் சசிகாந்த் செந்தில், 7,96,956 ஓட்டுகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறார். கட்சி சார்பில் போட்டியிட்டு குறைவான ஓட்டுகளை பெற்ற அங்கீகாரம் பெற்ற கட்சி வேட்பாளராக கன்னியாகுமரியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பசிலான் நசரத் உள்ளார். அவர் 41,393 ஓட்டுகளையே பெற்றார்.
ஓட்டு வித்தியாசம்
ஓட்டு வித்தியாசத்தை பொறுத்தவரை 39 தொகுதிகளில் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தான் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். அவர் 5,72,155 ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ஜ., வேட்பாளர் பாலகணபதியை தோற்கடித்தார். அதேபோல் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளராக விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இருக்கிறார். அவர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை 4,379 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்.