பா.ம.க.,வின் மாம்பழ சின்னம் யாருக்கு? ராமதாஸ் வழக்கில் நாளை விசாரணை
பா.ம.க.,வின் மாம்பழ சின்னம் யாருக்கு? ராமதாஸ் வழக்கில் நாளை விசாரணை
ADDED : பிப் 01, 2026 03:13 AM

சென்னை: அன்புமணி தலைமையிலான பா.ம.க.,வுக்கு, மாம்பழ சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
பா.ம.க., மீதான உரிமை தொடர்பாக, அதன் தலைவர் அன்புமணிக்கும் நிறுவனர் ராமதாசுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்தச் சூழலில், அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்கி, அது தொடர்பான கடிதத்தை அன்புமணி முகவரிக்கு தேர்தல் கமிஷன் அனுப்பியது.
இதையடுத்து, பா.ம.க., சின்னம் ஒதுக்கீடு தொடர்பான கடிதத்தை தன் முகவரிக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் எனவும், அன்புமணி முகவரிக்கு அனுப்பிய கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனு விபரம்:
கடந்தாண்டு மே மாதத்துடன் பதவி காலம் முடிந்த நிலையில், பா.ம.க., தலைவராக நீடிப்பதாகப் போலி ஆவணங்களை அன்புமணி தாக்கல் செய்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணிக்கு, தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியிருக்கக் கூடாது. சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக எனக்கு தான் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும்.
மாம்பழ சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் முடக்குவோம் என, டில்லி நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால், இதுநாள் வரை சின்னத்தை முடக்கவில்லை. எனவே, தேர்தல் கமிஷன் கடந்த ஜூலை 30ல் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராமதாஸ் தாக்கல் செய்த இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

