ADDED : செப் 16, 2025 04:50 AM

அன்புமணி தலைமையிலான பா.ம.க.,வை தேர்தல் கமிஷன் அங்கீகரித்திருக்கிறது என, அவரது ஆதரவு பா.ம.க., செய்தி தொடர்பாளர் பாலு பேட்டியளித்தார். அதை மறுத்து, ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.,வான அருள், 'தேர்தல் கமிஷன் அனுப்பி இருக்கும் கடிதத்தில் அன்புமணி பெயரே எங்கும் இல்லை. அப்படியிருக்க, அவரை எப்படி தேர்தல் கமிஷன் அங்கீகரித்திருப்பதாக சொல்ல முடியும்?' என கேள்வி எழுப்பி உள்ளார்.
இருவரும் மாறி மாறி அளித்த பேட்டிகள் இங்கே:
பாலு அளித்த பேட்டி:
மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில், பா.ம.க., பொதுக்குழு கூட்டம் கடந்த ஆகஸ்ட் 9ல் நடந்தது. அதில், 'சட்டசபை தேர்தல் நெருங்குவதால், உட்கட்சி தேர்தல் நடத்தும் சூழல் இல்லை. எனவே, பா.ம.க., தலைவர் அன்புமணி, பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோரின் பதவிக்காலம், வரும் 2026 ஆக., 1 வரை நீட்டிக்கப்படுகிறது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை, ஆகஸ்ட் 10ம் தேதி, தேர்தல் கமிஷனுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்தோம். கடந்த ஒரு மாதமாக இதை ஆய்வு செய்த தேர்தல் கமிஷன், பா.ம.க., தலைவர் அன்புமணியை அங்கீகரித்துள்ளது. சென்னை, தி.நகர், திலக் தெருவில் உள்ள பா.ம.க., தலைமை அலுவலகத்தையும் அங்கீகரித்துள்ளது.
மேலும், வரும் சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வுக்கு மாம்பழம் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது. பா.ம.க., வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதற்கான, 'ஏ' மற்றும் 'பி' படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும், அன்புமணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் அறிவிப்பால், பா.ம.க.,வில் இருந்த குழப்பங்கள் முடிவுக்கு வந்து விட்டன. பா.ம.க., தலைவராக அன்புமணியை ஏற்று செயல்படுபவர்கள் மட்டுமே, கட்சியின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த முடியும். அன்புமணி தலைமையில் இருப்பதுதான் பா.ம.க., என்பதால், மற்றவர்களை நிர்வாகிகளாக குறிப்பிடக்கூடாது ராமதாஸ் பக்கம் இருப்பவர்களும் அன்புமணி பக்கம் வர வேண்டும்.
அருள் அளித்த பேட்டி:
கடந்த, 48 ஆண்டாக, பா.ம.க.,வை கட்டிக்காத்த இயக்கத்தை, நிறுவனர் ராமதாஸிடம் இருந்து திருட நினைக்கின்றனர். கடந்த ஏப்., 14ல் நடந்த நிர்வாக குழுவில், செயல் தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டார். செயல் தலைவராக இருந்து, பொதுக்குழுவை கூட்ட அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. நிர்வாக குழுவில் நீக்கப்பட்டவர்களுக்கு, பொதுக்குழு, செயற்குழு கூட்ட அதிகாரம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, தேர்தல் கமிஷனுக்கு, நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பி உள்ளார்.
வக்கீல் பாலு, தேர்தல் கமிஷன், அன்புமணியை அங்கீகரித்ததாக கூறி வருகிறார். அவர் குறிப்பிடும், தேர்தல் கமிஷன் கடிதத்தில், அன்புமணி பெயர் எங்கேயும் இடம் பெறவில்லை. பா.ம.க.,வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் மட்டுமே உள்ளது. மொத்தத்தில் உண்மைக்கு மாறான தகவலை, வக்கீல் பாலு தெரிவித்து வருகிறார்.
ஒட்டுமொத்த பா.ம.க., சொந்தங்கள் அனைவரும், நிறுவனர் ராமதாஸ் பின்னால் அணிவகுத்துள்ளனர். பா.ம.க., என்றால் ஒன்று தான். அது நிறுவன தலைவர் ராமதாஸ் தலைமையில் இயங்குவது மட்டுமே. இதில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. தலைவர் மாற்றம் தொடர்பாக, தேர்தல் கமிஷனிடம் கடிதம் கொடுத்துள்ளோம். அதை ஏற்று, விரைவில் எங்களுக்கு கமிஷன் அங்கீகாரம் அளிக்கும். தந்தையிடம், 'ஈகோ' பார்ப்பதை விட்டு விட்டு, அன்புமணி இறங்கி வந்தால், தற்போதைய பிரச்னைகள் நொடியில் தீர்ந்துவிடும்.
- நமது நிருபர் -