யார் சொன்னாங்க?' * நானும், அன்புமணியும் ஒண்ணா சேரவில்லையே?
யார் சொன்னாங்க?' * நானும், அன்புமணியும் ஒண்ணா சேரவில்லையே?
UPDATED : ஆக 17, 2025 12:33 AM
ADDED : ஆக 17, 2025 12:16 AM

சென்னை :“நானும், அன்புமணியும் சமாதானம் ஆகிவிட்டதாக, யார் சொன்னது? கட்சிக்கு எதிராக செல்பவருடன், எப்போதும் சமரசம் என்பது கிடையாது. பா.ம.க., பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி, இன்று நடக்கும்,” என, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பா.ம.க.,வில் அப்பா - மகன் மோதல், ஏழரை மாதங்களாக நீடித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு, மனைவி, மகள்கள், பேரக் குழந்தைகளுடன், தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தார் அன்புமணி. தாய் சரஸ்வதியின் பிறந்த நாளை, 'கேக்' வெட்டி கொண்டாடினார். அப்போது தந்தை ராமதாசும் உடனிருந்தார்.
இதனால், மகன் அன்புமணியுடன் ராமதாஸ் சமாதானமாகி விட்டதாகவும், புதுச்சேரியில் இன்று பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடக்காது என்றும், சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இதை மறுத்துள்ள ராமதாஸ், திட்டமிட்டபடி, இன்று பொதுக்குழு கூட்டம் நடக்கும் என தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பா.ம.க., மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம்,இன்று காலை 10:00 மணிக்கு, புதுச்சேரி அருகில் உள்ள சங்கமித்ரா அரங்கில் திட்டமிட்டபடி நடக்கும்; இதில் எவ்வித மாற்றமும் இல்லை.
பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக, சில விஷமிகள் வதந்தி பரப்புவதாக செய்தி வருகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.
பொதுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் அனைவரும், அவசியம் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, திண்டிவனம் தைலாபுரத்தில், ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி:
இன்று நடக்கும் பொதுக்குழுவில், முக்கியமான பல தீர்மானங்களை நிறைவேற்ற இருக்கிறோம். எனவே, அழைக்கப்பட்ட அனைவரும் கண்டிப்பாக வர வேண்டும். குறைந்தது, 4,000 பேர் பொதுக்குழுவில் பங்கேற்பர்.
என் மனைவியும், அன்புமணியின் தாயுமான சரஸ்வதிக்கு நேற்று, 77வது பிறந்த நாள். அம்மாவுக்கு வாழ்த்துச் சொல்ல, தைலாபுரம் தோட்டத்திற்கு குடும்பத்துடன் அன்புமணி வந்தார். அப்போது, எனக்கு வணக்கம் சொன்னார்; பதிலுக்கு நானும் வணக்கம் சொன்னேன்; வேறு எந்த பேச்சும் இல்லை.
பதில் வணக்கம் சொல்வது சமாதானம் ஆகாது. அன்புமணி என்னிடம் ஆசிர்வாதம் வாங்கவில்லை. அவர் எங்கு சென்றாலும் இரு புகைப்படக் கலைஞர்களை உடன் அழைத்து செல்வார்.
நான் கொடுத்த செயல் தலைவர் பொறுப்பை அன்புமணி ஏற்காமல், தலைவர் எனக்கூறி ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார். அன்புமணியுடன் எவ்வித சமாதானமும் ஏற்படவில்லை.
மனைவியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களில், குடும்பத்தோடு இருந்தேன் என்பதால், மகன் அன்புமணியுடன் சமாதானம் ஆக வேண்டியது இல்லை.
ஆனால், இரு தரப்புக்கும் சமாதானம் ஏற்பட்டு விட்டது போல, வெளியில் வழக்கம் போல் செய்தி பரப்புகின்றனர். அது பற்றி வரும் செய்திகள் அனைத்தும் பொய்; திட்டமிட்டு செய்யும் சதி. இப்படியொரு செய்தியை பரப்புகிறவர்கள் யார் என்றும் எனக்கு தெரியும்.
மீண்டும் சொல்கிறேன், திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடக்கும். அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். கட்சிக்கு எதிராக செல்வோர் யாருடனும், எப்போதும் சமரசம் என்பது கிடையாது. பா.ம.க., தொடர்பாக, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தொடருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

