அதானியிடம் லஞ்சம் பெற்றது யார்? விசாரணை கேட்கிறார் ராமதாஸ்
அதானியிடம் லஞ்சம் பெற்றது யார்? விசாரணை கேட்கிறார் ராமதாஸ்
ADDED : நவ 21, 2024 07:37 PM
சென்னை:அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில், தமிழக மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளதால், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு ஆவணத்தில், அதானி குழுமம், 300 கோடி அமெரிக்க டாலர், அதாவது, 25,500 கோடி ரூபாய்க்கு அமெரிக்காவில் முதலீடுகளை திரட்டியுள்ளது. அதற்கு அடிப்படையாக, பல்வேறு மின் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை காட்டியதாகவும், அந்த ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, பல அமைப்புகளின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு அதை மறைத்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.
கடந்த 2021 முதல் 2022 வரையிலான காலத்தில், இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி அடிப்படையில், ஒடிசா, ஜம்மு காஷ்மீர், தமிழகம். சட்டீஸ்கர், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் மின் வாரியங்கள், இந்திய சூரிய ஒளி மின் உற்பத்தி கழகத்திடமிருந்து, மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களை செய்துள்ளன.
இவற்றில் ஆந்திர மின் வாரியத்துக்கு, 7 ஜிகா வாட் சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதற்கான ஒப்பந்தம் பெற, அம்மாநில மின் வாரிய அதிகாரிக்கு, 1,750 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.
தமிழக மின் வாரிய அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த விபரம், அதில் இடம்பெறவில்லை என்றாலும்கூட, லஞ்சம் பெற்றதில் தொடர்புடைய நிறுவனங்கள் பட்டியலில், பெயர் உள்ளது.
ஆட்சியாளர்களின் லாபம் மற்றும் சுயநலத்துக்காக, பொதுத்துறை நிறுவனங்களை நஷ்டத்தில் தள்ளுவதையும், அப்பாவி மக்கள் மீது மின் கட்டண சுமையை சுமத்துவதையும் அனுமதிக்க முடியாது. கடந்த ஜூலை 10-ம் தேதி முதல்வர் ஸ்டாலினை, அவருடைய இல்லத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார். ரகசிய சந்திப்பின் நோக்கம் என்ன?
அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில், தமிழக மின் வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இதுகுறித்து தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஸ்டாலின் - -கவுதம் அதானி சந்திப்பு குறித்தும் முறையான விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.