ADDED : பிப் 11, 2025 07:12 PM

சென்னை: நடிகை திரிஷாவின் சமூக வலைதள கணக்கு, இணையக்குறும்பர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நடிகை திரிஷா, தமிழ் மற்றும் தெலுங்குப்பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவரது சமூக வலைதள கணக்கில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அவரது எக்ஸ் கணக்கை மட்டும் 60 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
அவற்றில் அவ்வப்போது தன் படங்களை வெளியிடுவது திரிஷாவுக்கு வழக்கம்.
இன்று இன்ஸ்டாவில் ஒரு ஸ்டோரி பதிவிட்டிருந்த திரிஷா, 'என்னுடைய எக்ஸ் சமூக வலைதள கணக்கு (டுவிட்டர்) ஹேக் செய்யப்பட்டுள்ளது. அது மீட்கப்படும் வரை அதில் பதிவிடப்படும் எதுவும் என் பதிவல்ல' என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ரசிகர்கள், அவசரம் அவசரமாக, அவரது எக்ஸ் பக்கத்தில் சென்று பார்த்தனர். ஆனால், அங்கு சர்ச்சைக்குரிய பதிவுகள் எதுவும் இல்லை.
எக்ஸ் பக்கத்தை கைப்பற்றியது யார், அவர்களது நோக்கம் என்ன என்பது பற்றி தெரியாத நிலையில், களவாடப்பட்ட கணக்கை மீட்க திரிஷா முயற்சி மேற்கொண்டுள்ளார்
நேற்று நடிகை கஸ்துாரியின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்ட நிலையில், இன்று திரிஷாவின் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.