பொதுக்குழு கூட்டுவது யார்? பா.ம.க.,வில் உச்சகட்ட மோதல்
பொதுக்குழு கூட்டுவது யார்? பா.ம.க.,வில் உச்சகட்ட மோதல்
ADDED : ஜூன் 12, 2025 03:20 AM

திண்டிவனம்: பா.ம.க.,வில் பொதுக்குழுவை கூட்டுவது யார் என்பதில், அடுத்தகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கட்சியின் மாவட்டவாரியான பொதுக்குழு கூட்ட, கட்சியின் தலைவர் அன்புமணி அறிவிப்பு வெளியிட்டிருக்கும் நிலையில், கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று போட்டியாக பொதுக்குழுவை கூட்ட அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் முடிவுக்கு வந்ததாக சொல்லப்பட்ட நிலையில், இரு தரப்பும் மீண்டும் மோதலுக்கு தயாராகி உள்ளது.
தினமும் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து அறிவிப்பு வெளியிடும் ராமதாஸ், கட்சி பொறுப்பில் இருக்கும் அன்புமணி ஆதரவாளர்களை தொடர்ந்து நீக்கி வருகிறார்.
நேற்று முன்தினம் வரை புதிதாக 49 மாவட்ட செயலர்கள், 27 மாவட்ட தலைவர்களை நியமித்து உள்ளார்.
இந்நிலையில் நேற்று திருவாரூர், திருப்பூர் பகுதிகளுக்கு தலா 5 மாவட்ட செயலர்கள், 5 மாவட்ட தலைவர்களை புதிதாக நியமித்துள்ளார். இதன்மூலம் 54 மாவட்ட செயலர்கள், 32 மாவட்ட தலைவர்கள், ராமதாசால் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கு போட்டியாக, கட்சியின் மாவட்ட பொதுக்குழுவை கூட்டி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் அதிரடியாக முடிவெடுக்க அன்புமணி திட்டமிட்டு உள்ளார்.
இதற்காக வரும் 15ம் தேதி முதல், மாவட்டவாரியாக பொதுக்குழு கூட்ட அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அதில் முதற்கட்டமாக 10 வருவாய் மாவட்டங்களை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்களை அவர் சந்திக்கவிருக்கிறார்.
தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் பொதுக்குழு கூட்டம் நடத்த ஏற்பாடாகி வருகிறது.
இந்நிலையில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
இதில், கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இரு தரப்புக்குமான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.