பொதுப்பிரிவினர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன்: ஸ்டாலின் பேச்சு
பொதுப்பிரிவினர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன்: ஸ்டாலின் பேச்சு
ADDED : டிச 04, 2024 12:08 AM
சென்னை:புதுடில்லியில் நடந்த அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின், 3வது தேசிய மாநாட்டில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சமூக ரீதியாக, கல்வி ரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்களை கைதுாக்கி விடுவதுதான் சமூக நீதி. ஆனால், சமூக நீதியை பா.ஜ., முறையாக அமல்படுத்துவது இல்லை. கடந்த 10 ஆண்டு காலத்தில், மத்திய அரசின் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான, 27 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை.
ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்கள் முன்னேறுவதை, பா.ஜ., விரும்பவில்லை. அதனால்தான் அவர்கள் சமூக நீதிக்கு எதிராக இருக்கின்றனர். இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை நுழைக்க துடிக்கின்றனர்.
ஏழை, எளிய மக்களுக்கு பொருளாதார உதவி செய்வதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால், சமூக ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வழங்க வேண்டிய இடஒதுக்கீட்டை, பொருளாதார அளவுகோலை மட்டுமே அடிப்படையாக வைத்து, பொதுப் பிரிவினருக்கும் வழங்குவதை தான் எதிர்க்கிறோம்.
பா.ஜ., எப்படி பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதமான கட்சியோ, அதேபோன்று பெண்களுக்கும் விரோதமான கட்சி. அதனால்தான் பெண்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கிடப்பில் போட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீட்டை தடுத்து சதி செய்தது போலவே, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவும் பா.ஜ., அரசு முன்வரவில்லை. ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால், அதை வைத்து உண்மையான சமூக நீதியை வழங்க வேண்டும் என்பதால் தயங்குகின்றனர். இதற்கு எதிராக, அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வில்சன் எம்.பி., ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தி.மு.க., - எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.