'ஆன்லைன் கேம்'களுக்கு நேரக்கட்டுப்பாடு ஏன்: அரசு விளக்கம்
'ஆன்லைன் கேம்'களுக்கு நேரக்கட்டுப்பாடு ஏன்: அரசு விளக்கம்
ADDED : மார் 22, 2025 05:58 AM
சென்னை : தமிழகத்தில் 'ஆன்லைன்' விளையாட்டுகளை முறைப்படுத்த, 2022ல் தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்கு முறை சட்டம் இயற்றப்பட்டது.
இதன்கீழ், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்த, விதிமுறைகள் வகுக்கப்பட்டு, கடந்த பிப்.,14ல் அரசிதழில் வெளியிடப்பட்டது.
அதில், ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயம்; நள்ளிரவு 12:00 முதல் அதிகாலை 5:00 மணி வரை விளையாட யாரையும் அனுமதிக்கக் கூடாது' என, நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, 'ப்ளே கேம்ஸ் 24/7 பிரைவேட் லிமிடெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் ப்ளேயர்ஸ்' நலச்சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழக அரசு தரப்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கூறியிருப்பதாவது:
ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட பண நஷ்டம் காரணமாக, 2019- முதல் 2024 வரை, தமிழகத்தில், 47 பேர் தற்கொலை செய்துள்ளனர். ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தவே ஆணையம் அமைக்கப்பட்டது.
நள்ளிரவு 12:00 முதல் அதிகாலை 5:00 மணி வரை ஆன்லைனில் விளையாடினால், துாக்கமின்மை மற்றும் உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டே நேர கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. சிறுவர்கள், ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவதை தடுக்க, ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது. இதனால், அந்தரங்க உரிமைக்கு எந்த பாதிப்பும் இல்லை.
உளவியல் நிபுணர்கள் ஆலோசனை, அறிவியல் ரீதியான தரவுகள் அடிப்படையில், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.