200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்?
200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்?
ADDED : ஜூன் 03, 2025 01:43 AM

சென்னை: '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு கெஞ்சுவது ஏன்?' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
குடும்ப அரசியல் நடத்தும் தி.மு.க.,வினருக்கு, தன் மகனே எதிர்கால கட்சி என்பதை, மீண்டும் ஒருமுறை உணர்த்த, மதுரையில் பொதுக்குழு கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தி முடித்து இருக்கிறார்.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்ததில் இருந்து, தி.மு.க., எந்த அளவுக்கு பயந்துபோய் இருக்கிறது என்பதற்கு கடைசி தீர்மானமே சாட்சி. படுத்துக்கொண்டே, 200 தொகுதிகள் வெல்வோம் என்று ஜம்பம் பேசி வந்த ஸ்டாலினும், அக்கட்சியினரும் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியால் துாக்கத்தை தொலைத்து தவிக்கின்றனர்.
200 தொகுதிகள் என்றவர்கள் தற்போது, தொண்டர்களை களப்பணி ஆற்றுமாறு கெஞ்சுகின்றனர். ஊர் ஊராக சென்று நிர்வாகிகளை, தேர்தல் பணி செய்ய வைக்க முடியுமா என்று அலைபாய்கின்றனர்.
மாவட்டந்தோறும் வாரிசு அரசியலை வளர்த்து, குட்டி ஜமீன்தார்களாக வலம் வரும் தி.மு.க.,வின் இரண்டம் கட்ட தலைவர்களுக்கும், இது மகிழ்ச்சி தான். கருணாநிதி துவங்கிய குடும்ப அரசியலை ஏற்ற தி.மு.க.,வினருக்கு, இளவரசருக்கு துதி பாடுவதிலும் எந்த வெட்கமோ, வேதனையோ இருக்கப் போவதில்லை.
'சொந்த அரசியலுக்காக ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்க, என் தந்தை கருணாநிதி தாரை வார்த்த கச்சத்தீவை, மத்திய அரசு மீட்டுத்தர வேண்டும்' என்று, ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றி இருந்தால், மிக பொருத்தமாக இருந்திருக்கும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை பற்றி பேச, தி.மு.க.,வுக்கு எந்த தகுதியும் கிடையாது. மத்திய அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்து விட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

