ADDED : பிப் 12, 2025 07:45 PM
சென்னை:தமிழகத்தில் மூத்த கட்சி நிர்வாகிகளும், மாற்று கட்சிகளில் இருந்து பா.ஜ.,வுக்கு வந்தவர்களும், மத்திய அரசின் வாரியங்கள், பொதுத்துறை நிறுவன பதவிகளை கேட்பதால், மேலிட தலைவர்கள் தமிழகம் வர தயக்கம் காட்டுவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில் பல ஆண்டுகளாக, பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு சிலர் எந்த பலனையும் எதிர்பார்க்காமல், உழைத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வில் பல புதுமுகங்களுக்கு போட்டியிட, 'சீட்' வழங்கப்பட்டது. இது, கட்சிக்கு உழைத்தவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. சீட் கிடைக்காதவர்கள், மேலிட தலைவர்களை தொடர்பு கொண்டு, தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
கடந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் இருந்து, பா.ஜ.,வுக்கு ஐந்து - ஆறு எம்.பி.,க்கள் கிடைக்கும் என, மேலிட தலைவர்கள் எதிர்பார்த்தனர். எனவே, அதிருப்தியை வெளிப்படுத்திய நபர்களிடம், 'கட்சி அறிவித்த வேட்பாளரின் வெற்றிக்கு வேலை செய்யவும்; தேர்தல் முடிந்ததும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வாரியங்கள், ரயில்வே, துறைமுகம் போன்றவற்றில் பதவிகள் வழங்கப்படும்' என்று, மேலிட தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர்.
தேர்தலில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணியில் இருந்து ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இது, கட்சி தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், மஹாராஷ்டிரா பார்முலா போல், 2026 தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற்று, பா.ஜ., கூட்டணி ஆட்சியை உருவாக்க, தேசிய தலைமை வியூகம் வகுத்துள்ளது.
இதற்காக, தமிழகத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கும், மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கும், மத்திய அரசின் நிறுவனங்களில் பொறுப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, அவர்களின் சுயவிபர குறிப்புகளையும் மேலிடம் பெற்றது.
அதன் அடிப்படையில் இதுவரை பதவி வழங்காததால், அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள், டில்லி சென்று மேலிட தலைவர்களை சந்தித்து, 'எங்களுக்கு எப்போது பொறுப்பு வழங்கப்படும்' என்று கேட்டபடி உள்ளனர்.
தமிழகத்தில், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் சேர்க்கவும், கட்சி பணியை முடுக்கி விடவும், மத்திய அமைச்சர்களை தொடர்ந்து தமிழகத்திற்கு அனுப்ப, கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. அவர்களும், தமிழகம் வருகை தொடர்பாக, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
கட்சி மேலிடத்தில் இருந்து பதவி வழங்காத அதிருப்தியில் இருக்கும் தலைவர்கள் குறித்த விபரத்தை தெரிந்து, அவர்களுக்கு பதவி வழங்குமாறு, மேலிட தலைவர்களை தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.
இதனால், தமிழகம் வர மேலிட தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.