ஊரக பகுதிகளை நகரங்களுடன் இணைப்பது ஏன்? அமைச்சர் நேரு விளக்கம்
ஊரக பகுதிகளை நகரங்களுடன் இணைப்பது ஏன்? அமைச்சர் நேரு விளக்கம்
ADDED : ஏப் 16, 2025 12:11 AM
சென்னை:''நகரப் பகுதிகளில் நிலம் கிடைக்காத நிலையில், ஊரகப் பகுதிகளில் உள்ள நிலங்களில் திட்டங்களை நிறைவேற்றலாம். இதை கருத்தில் கொண்டு ஊராட்சி பகுதிகள், நகரப் பகுதிகளுடன் இணைக்கப்படுகின்றன,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறினார்.
சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:
காங்கிரஸ் - ராதாகிருஷ்ணன்: விருத்தாசலம் நகராட்சியில், 'பைபாஸ்' சாலையில் புதிய பஸ் நிலையம் அமைத்து தரப்படுமா?
அமைச்சர் நேரு: பஸ் நிலையம் அமைக்க, 5 ஏக்கர் நிலம் தேவை. நகராட்சி பகுதியில் நிலம் இல்லாததால், வருவாய் துறைக்கு சொந்தமான இடம் தேடப்படுகிறது.
அதுவும் கிடைக்காவிட்டால், தனியாரிடம் நிலத்தை விலை கொடுத்து வாங்க தயாராக இருக்கிறோம். தற்போது, பழைய பஸ் நிலையத்தை புனரமைக்கும் பணி, 90 லட்சம் ரூபாயில் நடந்து வருகிறது.
தி.மு.க., - கிரி: செங்கம் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இங்குள்ள, 90 சதவீத சாலைகள் குண்டும், குழியுமாக இருக்கின்றன. இங்கு மழைநீர் கால்வாய், புதிய சாலைகள் அமைக்க வேண்டும்.
அமைச்சர் நேரு: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சாலைகள் அமைக்க, 3,750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே, செங்கத்தில் உள்ள பிரதான சாலைகளும், இந்த நிதியில் சீரமைக்கப்படும்.
த.வா.க., - வேல்முருகன்: நெல்லிக்குப்பம் பஸ் நிலையம் கட்டப்பட்டு, இதுநாள் வரை ஒரு பஸ் கூட, அங்கு நின்று பயணியரை ஏற்றிச் செல்லவில்லை. அரசு செலவில் கட்டிய அந்த பஸ் நிலையத்தை, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
அமைச்சர் நேரு: விருதுநகர், ஆம்பூர் உள்ளிட்ட பல இடங்களிலும் இதுபோன்ற பிரச்னை உள்ளது. பைபாஸ் சாலைகள் அமைக்கப்பட்டதால், அந்த வழியாக செல்ல வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர். இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க., - காமராஜ்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வலங்கைமான் பேரூராட்சி நிறைய கிராமங்களை கொண்டது. இங்கு நீண்ட காலமாக பஸ் நிலையம் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
அமைச்சர் நேரு: நான்கு, ஐந்து கோடி ரூபாய் இருந்தால், இங்கு பஸ் நிலையத்தை கட்டி விடலாம்; பணம் இருக்கிறது; நிலம் இல்லை. அரசு புறம்போக்கு நிலம் இருந்தால், உடனடியாக பஸ் நிலையம் கட்டலாம்.
கொ.ம.தே.க., - ஈஸ்வரன்: திருசெங்கோட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்க சரியான நிலம் கிடைக்கவில்லை. எனவே, இப்போது இருக்கும் பஸ் நிலையத்தை மேம்படுத்தி தர வேண்டும்.
அமைச்சர் நேரு: திருசெங்கோடு பஸ் நிலையம் மிகுந்த போக்குவரத்து நெரிசல் உள்ள இடம். அங்கு விரிவாக்கம் செய்தால், மேலும் நெருக்கடி ஏற்படும்.
காவல் துறை, மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பா.ம.க., - ஜி.கே.மணி: வறட்சியான மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரிக்கு இரண்டாம் கட்டமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பணி இன்னும் துவங்கப்படாமல் உள்ளது.
அமைச்சர் நேரு: மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக, 8,000 கோடி ரூபாயை, 'ஜெய்கா' நிறுவனத்திடம் கடனாக கேட்டுள்ளோம்.
ஜூன் மாதம் 25ம் தேதி கடன் வழங்க ஒப்புதல் தருவதாக உறுதி அளித்துள்ளனர். நிதி கிடைத்தவுடன் ஜூலை மாதம் டெண்டர் கோரப்படும்.
அ.தி.மு.க., - தங்கமணி: குமாரபாளையம் தொகுதியில், 20,000 ஏக்கர் பாசனம் பெறும் 18 ஊராட்சிகளை, நகராட்சியுடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதை மறுபரிசீலனை செய்து ஊராட்சியாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் நேரு: சாலை, பாதாள சாக்கடை, கழிப்பறை, மின் விளக்கு உள்ளிட்ட வசதிகளை, பெரிய அளவில் ஊராட்சிகளில் செய்ய முடியவில்லை.
அருகில் இருக்கும் மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக, ஊராட்சிகளை, நகரப்பகுதிகளுடன் இணைக்கிறோம். நகரப் பகுதிகளில் நிலம் கிடைக்காத நிலையில், ஊரகப் பகுதிகளில் உள்ள நிலங்களில் திட்டங்களை நிறைவேற்றலாம்.
இதை கருத்தில் கொண்டு ஊராட்சி பகுதிகள், நகரப் பகுதிகளில் இணைக்கப்படுகின்றன. முழுக்க முழுக்க விவசாய பூமியாக இருந்தால், அதே நிலை தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.