வில்லங்க சான்றில் 8 முறை திருத்தம் டி.ஐ.ஜி., ரவீந்திரநாத் அனுமதித்தது ஏன்? பதிவு துறையில் விசாரணை துவக்கம்
வில்லங்க சான்றில் 8 முறை திருத்தம் டி.ஐ.ஜி., ரவீந்திரநாத் அனுமதித்தது ஏன்? பதிவு துறையில் விசாரணை துவக்கம்
ADDED : செப் 27, 2024 10:06 PM
சென்னை:ஒரு குறிப்பிட்ட சொத்து தொடர்பான வில்லங்க சான்றிதழில், எட்டு முறை திருத்தங்கள் மேற்கொள்ள மாவட்ட பதிவாளராக இருந்த ரவீந்திரநாத் அனுமதித்தது ஏன் என்பது குறித்து, பதிவுத்துறை உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பதிவுத் துறையில் சேலம் மற்றும் மதுரை மண்டலங்களின் டி.ஐ.ஜி.,யாக இருந்த ரவீந்திரநாத், சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
குற்றச்சாட்டு
சென்னை தாம்பரம் அருகில் நடந்த நில மோசடிக்கு, இவர் உடந்தையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தில் சையது அமீன் என்பவரின் 5 ஏக்கர் நிலம், போலி ஆவணங்கள் வாயிலாக காந்தம்மாள் என்பவரின் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுஉள்ளது. 2021ல் நடந்த இந்த மோசடி குறித்து, நிலத்தின் உரிமையாளர் சையது அமீன் புகார் அளித்தார்.
பின், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரம் நடந்த போது, தாம்பரத்தில் சார் - பதிவாளராக இருந்த மணிமொழியான் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கோவையில், 300 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கு தொடர்பாகவும், மணிமொழியானிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தாம்பரத்தில் நடந்த நில மோசடி விவகாரத்தில், வில்லங்க சான்றிதழில் எட்டு முறை திருத்தங்கள் செய்ய, தென்சென்னை மாவட்ட பதிவாளராக இருந்த ரவீந்திரநாத் உடந்தையாக இருந்ததாக மணிமொழியான் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில், டி.ஐ.ஜி., ரவீந்திரநாத் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொதுவாக ஒரு சொத்து தொடர்பான பத்திரப்பதிவு முடிந்ததும், அது குறித்த விபரங்கள் வில்லங்க சான்றுக்கான தகவல் தொகுப்பில் சேர்க்கப்படும்.
இப்படி சேர்க்கப்பட்ட தகவல்களில், எழுத்துப்பிழை போன்ற காரணங்களால் சிறிய மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை ஏற்படும்.
இதில் திருத்தங்கள் செய்ய, மாவட்ட பதிவாளர் தன் கைரேகையை பதிவிட்டு, 'டிஜிட்டல்' கையெழுத்தை பயன்படுத்தி தான் அனுமதிக்க முடியும்.
இவ்வாறு அனுமதிக்கும் போது, மாவட்ட பதிவாளர் மிக கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட சொத்தின் வில்லங்க சான்றிதழில், ஏன் எட்டு முறை திருத்தங்கள் செய்யப்படுகின்றன என்பதை, மாவட்ட பதிவாளராக இருந்த ரவீந்திரநாத் கவனிக்க தவறியது குறித்து விசாரிக்கப்படுகிறது.
விளக்கம்
சொத்தின் உரிமையாளருக்கு தெரியாமல், வில்லங்க சான்றிதழில் எட்டு முறை திருத்தங்கள் செய்வதை, எந்த அதிகாரியாக இருந்தாலும் ஏன் என்று விளக்கம் கேட்டிருப்பார்.
இந்த சின்ன விஷயம் கூட தெரியாமல், ரவீந்திரநாத் வேலை செய்திருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவசர கதியில் செயல்பட்டு, இதில் தவறுகள் நடக்கக்கூடாது என்பதற்காகவே, வில்லங்க சான்றை திருத்தும் அதிகாரம், மாவட்ட பதிவாளருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில் இருப்பவர், அவசரத்தில் கவனிக்காமல் விட்டு விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.