ADDED : அக் 08, 2024 01:37 AM
சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் திடீரென டில்லி சென்றது, அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்கள் என, அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என, அவர் வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க மாட்டோம் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.
அடுத்து சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்பதால், இந்த ஆண்டு இறுதிக்குள் தன் ஆதரவாளர்களுடன், அ.தி.மு.க.,வில் இணைய, பன்னீர்செல்வம் காய்களை நகர்த்தி வருகிறார்.
இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் காலை அவர் திடீரென மதுரையில் இருந்து, விமானத்தில் டில்லி சென்றார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோரை, அவர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், அவர் தன் மூத்த மகனும், முன்னாள் எம்.பி.,யுமான ரவீந்திர நாத்திற்கு உடல்நிலை சரியில்லாததால், டில்லி சென்றுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.