'கள்ளக்குறிச்சிக்கு செல்லாத முதல்வர் கரூர் வந்தது ஏன்? ' ஸ்டாலினுக்கு எதிராக முழங்கிய பழனிசாமி
'கள்ளக்குறிச்சிக்கு செல்லாத முதல்வர் கரூர் வந்தது ஏன்? ' ஸ்டாலினுக்கு எதிராக முழங்கிய பழனிசாமி
ADDED : அக் 04, 2025 08:10 AM

பாலக்கோடு : ' 'கள்ளக்குறிச்சியில் சாராயம் சாவுக்கு ஆறுதல் சொல்ல முதல்வர் ஸ்டாலின் போகாதது ஏன்,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
பிரசார பயணம் மேற்கொண்டிருக்கும் பழனிசாமி, தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் நேற்று பேசியதாவது:
கச்சத்தீவை மீட்பதற்கு நான் எதுவும் செய்யவில்லை என்று, முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். கச்சத்தீவை பற்றி பேச உங்களுக்கு தகுதியில்லை. மத்தியில் காங்., ஆட்சி, மாநிலத்தில் தி.மு.க., ஆட்சி இருந்தபோதுதான், கச்சத்தீவை தாரைவார்த்தது தி.மு.க., இதை மக்களும், மீனவர்களும் மறக்கவில்லை.
மீனவர்கள் நலன் கருதி, அ.தி.மு.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தை நாடியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 16 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகித்த தி.மு.க., இது குறித்து எதுவுமே செய்யவில்லை. அடுத்தாண்டு தேர்தல் வருவதால், அ.தி.மு.க., மீனவர்களுக்கு எதுவும் செய்யவில்லை என முதல்வர் பேசுகிறார். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற அக்கறை இருந்திருந்தால், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் அங்கம் வகித்தபோதே செய்திருக்கலாமே. தவறான கருத்தை வெளியிட்டால், அதற்கு தக்க பதிலடி தருவோம்.
கரூர் சம்பவத்தில், 41 உயிர்களை இழந்தோம். முதல்வர் இரவோடு இரவாக சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதில் தவறு இல்லை. ஆனால், கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து, 68 பேர் இறந்தனர். அங்கே செல்லாதது ஏன்? அடுத்தாண்டு தேர்தல் வருவதால், கரூருக்கு ஓடோடி வந்திருக்கிறார். ஆட்சிக்கு வருவதற்காக யார் காலையும் பிடிக்க தயங்காத கட்சி தி.மு.க., ஆனால் அ.தி.மு.க., அப்படியல்ல. தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே, பா.ஜ.,வும் அ.தி.மு.க.,வும் கூட்டணி சேர்ந்துள்ளது.
திறமையற்ற முதல்வர் ஸ்டாலினிடம், காவல் துறை நிர்வாகப் பொறுப்பு இருப்பதாலேயே குற்றங்கள் பெருகி உள்ளன. ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக பேசப்பட்ட காவல் துறை, ஸ்டாலின் நிர்வாகத்தால் சீரழிந்துள்ளது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை.
கரூர் சம்பவத்தை பா.ஜ., - எம்.பி.,க்கள் குழு வந்து ஆய்வு செய்தது. பாதிப்புக்குள்ளான மக்களுக்கு ஆறுதல் சொல்ல வருவதில் தவறில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.