'வக்பு வாரிய சட்ட திருத்த கருத்து கேட்புக்கு முஸ்லிம் அமைப்புகளை அழைக்காதது ஏன்?'
'வக்பு வாரிய சட்ட திருத்த கருத்து கேட்புக்கு முஸ்லிம் அமைப்புகளை அழைக்காதது ஏன்?'
ADDED : செப் 30, 2024 06:17 AM

சென்னை : 'வக்பு வாரிய சட்ட திருத்தம் தொடர்பான, பார்லிமென்ட் கூட்டுக்குழு கூட்டத்திற்கு, பல முஸ்லிம் அமைப்புகளுக்கு, தி.மு.க., அரசு அழைப்பு விடுக்கவில்லை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: மத்திய அரசு கடந்த பார்லிமென்ட் கூட்டத்தில், வக்பு வாரிய சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொள்ளும் சட்ட திருத்தத்தை அறிமுகம் செய்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு உருவானதும், இச்சட்டம் கூட்டு பார்லிமென்ட் குழுவுக்கு அனுப்பப்பட்டது.
அந்த குழு அனைத்து மாநிலங்களுக்கும் சென்று, முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்டு வருகிறது. சென்னையில் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை செய்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள, வக்பு வாரிய சட்ட திருத்தத்தில் இருக்கும் சாதக - பாதகங்கள் குறித்து, முஸ்லிம்கள்தான் உணர்ந்து சொல்ல முடியும்.
எதையும் குழப்புவதையே தொழிலாக கொண்ட தி.மு.க., அரசு, கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஆதரவான ஒரு சில அமைப்புகளுக்கு மட்டும் அழைப்பு அனுப்பிவிட்டு, பல முஸ்லிம் அமைப்புகளுக்கு அழைப்பு அனுப்பவில்லை என, செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள சட்டப்படி, வக்பு வாரிய தலைவர் மற்றும் உறுப்பினர்களாக முஸ்லிம்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். ஆனால், புதிதாக உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தத்தின்படி, தேர்வு முறையே மாற்றப்பட்டு, முஸ்லிம் அல்லாதவரும் உறுப்பினராக நியமிக்கப்படுவர்.
மாநில அளவில், வக்பு வாரிய தலைவர் மற்றும் உறுப்பினருக்கு உள்ள அதிகாரம், உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட திருத்தத்தின்படி, கலெக்டர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இதன் வழியே, ஆளும் கட்சியினர், வக்பு வாரிய சொத்துக்களை எளிதில் அபகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
இந்த சட்ட திருத்தம், முஸ்லிம் மக்களுக்கு, இந்திய அரசு வழங்கியுள்ள, அடிப்படை உரிமையையே தகர்த்து எறிவதாக உள்ளதால், உடனடியாக சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்.
பெரும்பாலான முஸ்லிம் நலம் காக்கும் அமைப்புகளை, கருத்து கேட்பு கூட்டத்திற்கு அழைக்காமல், தி.மு.க., அரசு புறக்கணித்துள்ளது. இது, முஸ்லிம் மக்களுக்கு செய்துள்ள துரோகம். இச்செயலை அ.தி.மு.க., கண்டிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

