பிரதமர் பங்கேற்ற விழாவில் திருமா கலந்து கொண்டது ஏன்? விடுதலை சிறுத்தைகள் விளக்கம்
பிரதமர் பங்கேற்ற விழாவில் திருமா கலந்து கொண்டது ஏன்? விடுதலை சிறுத்தைகள் விளக்கம்
ADDED : ஜூலை 29, 2025 01:26 AM

பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில், வி.சி., தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டதையும், திருச்சி விமான நிலையத்தில், பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியில் ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை பங்கேற்றதையும், அ.தி.மு.க., வரவேற்றுள்ளது. இதற்கு, காங்கிரஸ், வி.சி., கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கங்கைகொண்ட சோழபுரம் கோவில் வளாகத்தில், ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான, ஆடி திருவாதிரை விழாவில், பிரதமர் மோடியுடன், திருமாவளவன் ஒரே மேடையில் பங்கேற்றார்.
உற்சாகம்
இவ்விழாவில் எதிர்க்கட்சி எம்.பி.,யாக இருந்தாலும், பா.ஜ.,வின் கொள்கை, கோட்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும், திருமாவளவன் பங்கேற்றது பா.ஜ.,வினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
ராஜேந்திர சோழன் கட்டிய கோவிலுக்கு, பிரதமர் மோடி வந்ததையும், ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்கப்படும் என, பிரதமர் மோடி அறிவித்ததையும், திருமாவளவன் வரவேற்றுள்ளார். ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை, திருச்சி விமான நிலையத்தில், பிரதமர் மோடியை வரவேற்க சென்றிருந்தார்.
தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, இரண்டு கட்சிகளின் எம்.பி.,க்களும், பிரதமர் மோடியை சந்திப்பதை தவிர்க்காமல் பங்கேற்றது, அ.தி.மு.க., - பா.ஜ., கட்சியினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இது குறித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறுகையில், ''தி.மு.க., கூட்டணியில் இருந்த போதும், ஒரு எம்.பி.,யாக பிரதமரை வரவேற்றது போற்றக்கூடியது. திருமாவளவன் அற்புதமான மனிதர். அவர்  பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்றது சிறப்புக்குரியது. இது அரசியலில் பெருமைக்குரிய திருப்புமுனை,'' என்றார்.
அரசியல் இல்லை
அவரது பாராட்டுக்கு, வி.சி., துணைப் பொதுச்செயலர் வன்னியரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ''முதலாம் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில், பிரதமர் என்ற முறையில் மோடி பங்கேற்றார்.
சிதம்பரம் லோக்சபா தொகுதி எம்.பி., என்ற முறையில், திருமாவளவன் பங்கேற்றார். இதில் எந்த அரசியலும் இல்லை. தொகுதியில் நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்பது மரபு. அந்த வகையில் தான் திருமாவளவன் பங்கேற்றார்,'' என்றார்.
அதேபோல், தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை கூறுகையில், ''திருமாவளவன், சிதம்பரம் தொகுதி எம்.பி., என்ற அடிப்படையில் பிரதமர் மோடி, நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் திருப்புமுனை என்பதெல்லாம் எதுவும் இல்லை,'' என்றார்.
- நமது நிருபர் -

