துப்பட்டாவை வாங்கி வைத்தது ஏன்? போலீசார் விளக்கம்
துப்பட்டாவை வாங்கி வைத்தது ஏன்? போலீசார் விளக்கம்
ADDED : ஜன 05, 2025 10:26 PM

சென்னை: பணியில் இருந்த காவலர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் கருப்பு நிற துப்பட்டாவை வாங்கி வைத்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. இதனை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் அணிந்திருந்த , வைத்திருந்த கருப்பு நிற பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கருப்பு நிற துப்பட்டா அணிந்து வந்த மாணவிகளிடம் அதை பாதுகாப்பு பிரிவு போலீசார் வாங்கி வைத்துக் கொண்டு அனுமதித்தனர். நிகழ்ச்சி முடிந்த பின்னரே கருப்பு நிற பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. இதற்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பணியில் இருந்த காவலர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் நிகழ்ந்தது தெரிய வருகிறது. விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்ட நபர்களை தணிக்கை செய்த போலீசார் கருப்பு துப்பட்டா அணிந்து வந்தோரிடம் துப்பட்டாவை வாங்கி வைத்தனர்.இனி அவ்வாறு நடக்காமல் இருக்க பாதுகாப்பு சென்னை போலீஸ் பிரிவுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் போலீசார் தெரிவித்து உள்ளனர்.