அமித் ஷாவை சந்தித்தது ஏன்? மாஜி முதல்வர் பன்னீர் விளக்கம்
அமித் ஷாவை சந்தித்தது ஏன்? மாஜி முதல்வர் பன்னீர் விளக்கம்
ADDED : ஜன 04, 2026 02:43 AM

போடி -: ''பிரிந்து கிடக்கும் சக்திகள் ஒன்றிணைந்தால் மட்டுமே அ.தி.மு.க., வெற்றி பெற முடியும்,'' என்று, முன்னாள் முதல்வரும், அ.தி.மு. தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் போடியில் அவர் அளித்த பேட்டி:
த.வெ.க.,வில் இணைந்திருக்கும் முன்னாள் எம்-.எல்.ஏ., பிரபாகர், என்னை விட்டு சென்று பல ஆண்டுகள் ஆனாலும், என்னுடன் தொடர்பில் தான் உள்ளார்.
எந்த நோக்கத்திற்காக அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., உருவாக்கினாரோ, அது நிறைவேற வேண்டுமெனில், கட்சியில் பிரிந்து கிடக்கும் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்.
அப்படி சேர்ந்தால் மட்டுமே, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற முடியும். அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என்பது தான் தொண்டர்களின் குரல். அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில், அ.தி.மு. தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்திற்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை.
நாங்கள் அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைத்ததால், டில்லி சென்று தமிழக அரசியல் நிலவரம் குறித்து தெரிவித்தேன். அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவி தொடர்பாக எங்கள் சட்டப் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

