கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு காங்., வாழ்த்து கூறாதது ஏன்? மத்திய இணை அமைச்சர் முருகன் கேள்வி
கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு காங்., வாழ்த்து கூறாதது ஏன்? மத்திய இணை அமைச்சர் முருகன் கேள்வி
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 06:14 PM

கோவை:
‘பிரதமர் மோடி அளித்து வரும் ஊக்கத்தால், இந்திய விளையாட்டு வீரர்கள், சர்வதேச விளையாட்டுகளில் சாதனை படைத்து வருகின்றனர்,’ என மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.
கோவை, சூலூரில் நேற்று அவர் கூறியதாவது;
‘பிளை துபாய்’ விமானத்தில், பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி, உயிரை பொருட்படுத்தாமல், சமயோசிதமாக செயல்பட்டு, 174 பயணிகள் உயிரை காப்பாற்றிய கேப்டன் ஸ்மித் மச்சாரின் தீரத்தை பிரதமர் மோடி மட்டுமின்றி, அமெரிக்க அதிபர் உட்பட, உலக தலைவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், காங்., தலைவர்கள் பாராட்டவில்லை; இது அவர்களின் குறுகிய மனதை காட்டுகிறது.
மத்திய அரசு, விளையாட்டு துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. 'கேலோ இந்தியா', 'பிட் இந்தியா' உள்ளிட்ட திட்டங்கள் வாயிலாக, விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கி வருகிறது. இப்படியாக, பிரதமர் மோடி ஊக்கம் அளிப்பதால் தான், நம் வீரர்கள் சர்வதேச விளையாட்டுகளில் சாதனை படைத்து வருகின்றனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில், 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் பதக்கங்களை வென்று, நம் வீரர்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வரும் 2030ல் காமன்வெல்த் போட்டிகளையும், 2036 ல் ஒலிம்பிக் போட்டிகளையும், நம் நாட்டில் நடத்த திட்டமிட்டு முன்னேறி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
