கூட்டம் குறித்து இரண்டாம் கட்ட தலைவர்கள் விஜயிடம் ஏன் சொல்லவில்லை: நடிகர் தாடி பாலாஜி
கூட்டம் குறித்து இரண்டாம் கட்ட தலைவர்கள் விஜயிடம் ஏன் சொல்லவில்லை: நடிகர் தாடி பாலாஜி
ADDED : அக் 02, 2025 07:17 AM

கரூர்: ''த.வெ.க., தலைவர் விஜய்க்கு, இரண்டாம் கட்ட தலைவர்கள் ஏன், பொதுக்கூட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கவில்லை,'' என, த.வெ.க., பிரமுகரும், நடிகருமான தாடி பாலாஜி கேள்வி எழுப்பினார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில், 41 பேர் உயிரிழந்த இடத்தை பார்வையிட்ட, நடிகர் தாடி பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த, 27ல் கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க., கூட்டத்தில் துயர சம்பவம் நடந்த போது, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இருந்தேன். அப்போது, துயர சம்பவத்தை டிவியில் பார்த்த போது கஷ்டமாக இருந்தது. விஜய்க்கு இதே மனநிலைதான் இருக்கும்.
விஜயை பொறுத்தவரை, ஏழு மணி கால்ஷீட்டுக்கு, ஆறு மணிக்கே ெஷட்டுக்கு வந்து விடுவார். விஜய்க்கு எல்லாம் தெரியும் என, சொல்லி விட முடியாது. அரசியலில் அனுபவம் வாய்ந்த, இரண்டாம் கட்ட தலைவர்கள் ஆனந்த், ஆதவ் அர்ச்சுணா, நிர்மல் குமார் போன்றவர்கள், ஏன் பொதுக்கூட்ட செயல்பாடுகள், நேரம் குறித்து விஜயிடம் சொல்லவில்லை.
இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது, த.வெ.க.,வில் பலருக்கு அதிருப்தி உள்ளது. இந்த துயர சம்பவத்தின் மூலம், விஜய்க்கு சில விஷயங்கள் புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். விஜய் விரைவில், கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசுவார். கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் மதியழகன், கட்சி தலைமையிடம் சட்ட உதவி கேட்டாரா என தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பிறகு, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குரு விஷ்ணு, சுகன்யா ஆகியோரின் குடும்பத்தினரை சந்தித்து, நடிகர் தாடி பாலாஜி ஆறுதல் கூறினார்.