கமல் பிரதமரை சந்தித்ததை ஏன் விமர்சிக்கவில்லை: வைகோ கேள்வி
கமல் பிரதமரை சந்தித்ததை ஏன் விமர்சிக்கவில்லை: வைகோ கேள்வி
ADDED : ஆக 13, 2025 01:28 AM

கம்பம்: ''ம.தி.மு.க., தலைமை நிலைய செயலாளர் துரை பிரதமர் மோடியை சந்தித்ததையடுத்து ம.தி.மு.க., அணி மாறுகிறது என விமர்சித்த பத்திரிகைகள், ம.நீ.ம., தலைவர் கமல், தி.மு.க., எம்.பி., கனிமொழி பிரதமரை சந்தித்ததை ஏன் விமர்சிக்கவில்லை,'' என, கம்பத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ கேள்வி எழுப்பினார்.
வைகோ மேலும் பேசியதாவது: முல்லைப் பெரியாறு அணையை காக்க 4 முறை உண்ணாவிரத போராட்டம் நடத்தியுள்ளேன். நியூட்ரினோ திட்டத்தால் கேரளாவிற்கும் ஆபத்து என்று அங்குள்ள தலைவர்களிடம் விளக்கினேன். என்னை வசை பாடிய கேரள மக்கள் போற்ற துவங்கினார்கள். நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் ஏற்படுத்தி இப்பகுதியை அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளேன்.
ரஷ்யா உக்ரைன் போரில் சிக்கிய தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்க, அந்த மாணவர்களின் பெற்றோர்கள் கேட்டதால், ம.தி.மு.க., தலைமை நிலைய செயலாளர் துரை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் 25 நிமிடங்கள் ஒதுக்கினார். ஆனால் மறுநாள் பத்திரிகைகளில் ம.தி.மு.க., அணி மாறுகிறது என செய்தி வெளியிட்டனர்.
துரை பிரதமரை சந்தித்த பின் கமல், கனிமொழி பிரதமரை சந்தித்தனர். ஏன் அதை பத்திரிகைகள் விமர்சிக்கவில்லை.
2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க., கூட்டணியில் தான் ம.தி.மு.க., இருக்கும். இவ்வாறு பேசினார்.
மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகிக்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.