பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க மனைவிக்கு எதற்கு கணவர் அனுமதி? ஆணாதிக்கம் என்கிறது ஐகோர்ட்
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க மனைவிக்கு எதற்கு கணவர் அனுமதி? ஆணாதிக்கம் என்கிறது ஐகோர்ட்
ADDED : ஜூன் 21, 2025 02:09 AM
சென்னை:'பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவரின் அனுமதி, அவரது கையெழுத்தை, மனைவி பெற வேண்டிய அவசியம் இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ரேவதி என்பவர், பாஸ்போர்ட் கோரி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த ஏப்ரலில் விண்ணப்பம் செய்தார்.
'கணவரின் கையெழுத்து பெற்றிருந்தால் மட்டுமே, அந்த விண்ணப்பத்தை பரிசீலிக்க முடியும்' என, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி நிராகரித்து விட்டார்.
கணவருக்கும், தனக்கும் பிரச்னை ஏற்பட்டு, கணவர் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளதால், கணவரின் கையெழுத்தை வற்புறுத்தாமல், பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், ரேவதி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, அவரது கையெழுத்தோ மனைவி பெற வேண்டிய அவசியம் இல்லை.
கணவரின் கையெழுத்து பெற வேண்டும் என்று வற்புறுத்துவதன் வாயிலாக, ஒரு பெண்ணை கணவனின் உடைமையாக கருதும், இந்த சமூகத்தின் மனப்பான்மையையே மண்டல பாஸ்போர்ட் அதிகாரியின் செயல் காட்டுகிறது.
ஏற்கனவே கணவன், மனைவி உடனான உறவில் பிரச்னை உள்ள நிலையில், கணவரிடம் இருந்து கையெழுத்து பெற்று வருவது என்பது இயலாது.
திருமணமாகி விட்டால், பெண் தன் அடையாளத்தை இழந்து விடுவதில்லை. கணவனின் அனுமதி, கையெழுத்து இல்லாமல் மனைவி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க முடியும்.
கணவனின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை, ஆணாதிக்கத்தை காட்டுகிறது. எனவே, மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலித்து, பாஸ்போர்ட் மண்டல அதிகாரி, நான்கு வாரங்களில் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.