'அ.தி.மு.க.,வை விமர்சித்தால் சேகர்பாபுவுக்கு வலிப்பது ஏன்?'
'அ.தி.மு.க.,வை விமர்சித்தால் சேகர்பாபுவுக்கு வலிப்பது ஏன்?'
ADDED : மார் 24, 2025 06:15 AM

விருதுநகரில், த.வா.க., வேல்முருகன் அளித்த பேட்டி:
மருதமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டும் என்பதற்காக, கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர, கடந்த ஜன., 14ல் சபாநாயகரை சந்தித்து கடிதம் அளித்தேன். அப்போது, சபாநாயகர் அறைக்கு வந்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடமும், கடிதத்தின் நகலை கொடுத்து கோரிக்கையை வலியுறுத்தினேன்.
'கும்பாபிஷேகம், அர்ச்சனையை தமிழில் செய்ய வேண்டும் என, தமிழர்கள் யாரும் வலியுறுத்தவில்லை; உங்களை போன்றவர்கள் தான் பிரச்னை ஆக்குகிறீர்கள்' என, அமைச்சர் சேகர்பாபு கொந்தளிப்பாக பேசினார்.
'ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருப்பவர்கள் தேச விரோதிகள்' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியதை, சட்டசபையில் சுட்டிக்காட்டியதுடன், ஆந்திரா, ஒடிசா, பீஹார், தெலுங்கானா மாநிலங்களில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., - ஓ.பி.சி., இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு உள்ளதற்கான ஆதாரத்தையும் காண்பித்தேன். அதற்கு அத்துறையின் அமைச்சராக இல்லாத அமைச்சர் சேகர்பாபு, என்னை ஒருமையிலும், வேறு சில வார்த்தைகளிலும் பேசினார். இதனால், என் இருக்கையில் இருந்து எழுந்து, அமைச்சர் சேகர்பாபுவிடம் சென்று பேசினேன்.
சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும், அ.தி.மு.க.,வினரிடம் மிக நெருக்கமாக அமைச்சர் சேகர்பாபு உள்ளார். அ.தி.மு.க., ஆட்சியில் செய்த தவறுகளை சுட்டிக்காட்டும் போது, அவருக்கு ஏன் வலிக்கிறது? சபாநாயகர் அப்பாவு தன்னை தலைமையாசிரியர் போலவும், எம்.எல்.ஏ.,க்களை மாணவர்கள் போலவும் நினைத்துக் கொண்டு சபையை நடத்துகிறார்.
தமிழக சட்டசபையின் மரபுகளையும், மாண்புகளையும் மதிக்காமல் வெளியேறிய கவர்னர் ரவியை எதிர்த்து, முதல் ஆளாக குரல் எழுப்பியது, இந்த ஒத்தை சீட்டு வேல்முருகன் தான். அப்போது, சபாநாயகர் இருக்கைக்கு முன்னால் ஏன் வந்தீர்கள் என, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் யாருமே கேட்கவில்லையே... அப்போது கைதட்டி ரசித்தவர்கள், இப்போது மரபு பற்றி பேசுவது ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.