'நடவடிக்கை எடுத்தும் மழைநீர் ஏன் தேக்கம்?' மாநகராட்சிக்கு ஐகோர்ட் அதிரடி கேள்வி
'நடவடிக்கை எடுத்தும் மழைநீர் ஏன் தேக்கம்?' மாநகராட்சிக்கு ஐகோர்ட் அதிரடி கேள்வி
ADDED : நவ 08, 2024 11:15 PM
சென்னை:பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜி.ஜி.மேத்யூ என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ரத்தின சபாபதி சாலையில், பருவமழை காலங்களில், மழைநீர் தேங்குகிறது. கடந்தாண்டு தேங்கிய மழைநீர், ஐந்து நாட்கள் வரை வடியவில்லை.
பல முறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் மனு அளிக்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் பெய்த மழையால் தேங்கிய மழைநீர் பற்றி வீடியோ காட்சிகளுடன் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளேன். இப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் கழிவுநீர் ஓடைகளை முறையாக பராமரிக்காததால், மழை நீர் வெளியேற முடியவில்லை.
எனவே, ரத்தினசபாபதி சாலையில் உள்ள மழைநீர் வடிகால்களை சரி செய்ய வேண்டும்; பாதாள சாக்கடையில் உள்ள அடைப்புகளை அகற்றி, மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக, கடந்த ஆக., 3ல் கொடுத்த புகார் மனுவை, மாநகராட்சி அதிகாரிகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
ரத்தின சபாபதி சாலையில் தேங்கும் மழைநீர், வடிகால்களில் பதிக்கப்பட்ட குழாய் வாயிலாக கடலில் சென்று கலக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை பார்க்கும்போது, முழங்கால் அளவு மழை நீர் உள்ளது தெரிகிறது.
மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் சாலையில் ஏராளமான குடியிருப்புகள், விடுதிகள், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை, ஏற்கனவே துவங்கியுள்ளதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக, மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அப்பகுதியில், மழைநீர் ஏன் தேங்குகிறது.
பழைய வண்ணாரப்பேட்டையில் மழை நீர் தேங்காமல் இருக்க எடுத்த நடவடிக்கை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நவ.14க்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.