sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மண்ணின் மைந்தர்களை மனிதராக பாருங்களேன்! கோடிகள் கொட்டியும் குடிசைகள் மட்டுமே மிச்சம்?

/

மண்ணின் மைந்தர்களை மனிதராக பாருங்களேன்! கோடிகள் கொட்டியும் குடிசைகள் மட்டுமே மிச்சம்?

மண்ணின் மைந்தர்களை மனிதராக பாருங்களேன்! கோடிகள் கொட்டியும் குடிசைகள் மட்டுமே மிச்சம்?

மண்ணின் மைந்தர்களை மனிதராக பாருங்களேன்! கோடிகள் கொட்டியும் குடிசைகள் மட்டுமே மிச்சம்?

1


UPDATED : ஜூலை 10, 2025 04:36 AM

ADDED : ஜூலை 09, 2025 09:37 PM

Google News

1

UPDATED : ஜூலை 10, 2025 04:36 AM ADDED : ஜூலை 09, 2025 09:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம் மாநிலத்தில், 36 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், மொத்தமுள்ள மக்கள் தொகையில், 3.5 சதவீதம் மட்டுமே உள்ளனர். மாநிலத்தில், 20 மாவட்டங்களில் இவர்கள் வாழ்ந்து வரும் நிலையில், மலை மாவட்டமான நீலகிரியில், 'தோடர், கோத்தர், இருளர், குரும்பர், பணியர், காட்டு நாயக்கர்,' ஆகிய, 6- சமுதாய பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த, 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நீலகிரி மாவட்டத்தில், 28,889 பேர் வசிப்பதாக தெரிய வந்துள்ளது. இவர்களில், தோடர், கோத்தர் மற்றும் குரும்பர் சமுதாய மக்கள் விவசாயம் மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

ஆனால், பணியர், இருளர், காட்டு நாயக்கர் பழங்குடியின மக்கள் இதுவரை விவசாயம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வளர்ச்சி காணாமல், வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் மிகவும் நலிந்த நிலையில் வசித்து வருகின்றனர். அதில்,பெரும்பாலானர்கள், வெளி ஆட்களை கண்டால், ஓடி ஒளிந்து கொள்ளும் கூச்ச சுபாவம் உள்ளவர்களாக காணப்படுகின்றனர்.

சமீப காலமாக, பழங்குடியின மக்களில், கல்லுாரி படிப்பை நிறைவு செய்த இளைய தலைமுறையினர் அதிகளவில் இருந்தும், அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை வழங்குவதில் அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.

மாவட்ட தலைநகரத்திற்கு முக்கிய வி.ஐ.பி.,கள்வரும்போது, வெறும் காட்சி பொருளாக மட்டுமே பழங்குடியின மக்கள் இன்றளவும் பயன்படுத்தப்படுகின்றனர்.

பட்டா வழங்கியும் பயனில்லை


இந்நிலையில், மாநில அரசு சார்பில் சமீபத்தில், 1,000 பழங்குடியின குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வீடு கட்ட தற்போது, 5.70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்த போதும், பல்வேறு கிராமங்களில் வீடு கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பணிகள் நடந்த இடங்களில் மழை காலத்தில் வீடுகளின் சுவர்கள், 'மழை நீரில் கரையும்' அளவுக்கு தான் தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளன. பல கிராமங்களில், 'நடைபாதை, சாலை, குடிநீர், தெருவிளக்கு,' என, எந்த வசதிகளுமே இல்லாமல் கற்கால மனிதர்களை போல மண்ணின் மைந்தர்கள் குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர்.

'சிக்கல் செல் அனிமியா' அபாயம்


பூர்வ குடிகளான இவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் அதிகம் உள்ளன. அதில், குறிப்பிட்ட சில பழங்குடிகளுக்கு, 'சிக்கல் செல் அனிமியா' என்ற ரத்தசெல் பாதிப்பு பரம்பரை நோயாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த சிகிச்சைகள் மட்டும் தொடர்ந்து வருகிறது.

அரசு இவர்களின் பொருளாதார முன்னேற்றம், கல்வி, உடல் ஆரோக்கியம், சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாழ்விடங்களில் உள்கட்டமைப்பு அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை, 70 ஆண்டுகளாக செயல்படுத்தினாலும், அவை முழுமையாக அவர்களை சென்றடைவதில்லை. இதனால், பெரும்பாலான பழங்குடியினர், மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகின்றனர். பல குடும்பங்கள் கூலிகளாக பணிக்கு சென்று, போதையின் பிடியில் சிக்கி உள்ளன.

விசாரணை குழு அமைக்க வேண்டும்


மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஒவ்வொரு பட்ஜெட் கூட்ட தொடரிலும் பழங்குடியினர் நலனுக்காக திட்டங்கள்; நிதி ஒதுக்கப்படுகிறது. அவை முழுவதுமாக பழங்குடியின மக்களை சென்றடைவதில்லை. இது குறித்து முழுமையான தகவல்களை அறிய, மாநில அரசு பழங்குடிகள் வாழ்வியலை பற்றி அறிந்த தனிக்குழுவை அமைக்க வேண்டும்.

மாவட்டத்தில், பிற மக்கள் செல்லாத ஒதுக்கப்பட்ட இடங்களிலும் வாழும் பழங்குடியின மக்களை சந்தித்து, இதுவரை அரசு நிர்வாகங்கள் ஒதுக்கீடு செய்த நிதி, கிராமங்களில் முழுமையாக சென்றடைந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

அதில், குளறுபடிகள் நடந்திருந்தால், இத்திட்டங்களை நிறைவேற்றிய அதிகாரிகள், திட்ட குழுவினர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், வரும் காலங்களில் பழங்குடியினருக்கான திட்டங்கள் முழுமையாக அவர்களை சென்றடைந்து, அழிவின் பிடியில் உள்ள இந்த சமுதாயத்தை காப்பாற்ற முடியும்.

கூடலுார் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சலீம் கூறுகையில்,'' ஊராட்சி ஒன்றியம் முழுவதும், 960 வீடுகள் கட்டுவதற்கான உத்தரவு பழங்குடியினருக்கு வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வனத்துறை தடையால் பணி பாதியில் உள்ளது. விரைவில் பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

-பெயரளவுக்கு நடக்கும் திட்டங்கள்

பண்டைய பழங்குடி மக்களின் தலைவர் சந்திரன், ''நீலகிரி மாவட்டத்தில் மிகவும் சொற்ப அளவில் வாழ்ந்து வரும், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு முழு கவனம் செலுத்தவில்லை. மாறாக பெயரளவிற்கு திட்ட முகாம்களை மட்டும் நடத்தி, போட்டோக்கள் எடுத்து தங்கள் பணியை நிறைவு செய்து கொள்கிறது. பந்தலுார், கூடலுார் பகுதிகளில் ஆபத்தான குடியிருப்புகள், நடைபாதை மற்றும் சாலைகள், குடிநீர் வசதி போன்றவற்றை மேம்படுத்த யாரும் முன் வருவதில்லை. பழங்குடியினருக்காக தனியாக துணை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தும், அவர்கள், அரசு நிகழ்ச்சி, பழங்குடியினர் பள்ளி நிகழ்ச்சிகளில் மட்டுமே தலை காட்டுகின்றனர். பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதை எங்களின் கிராமங்களை பார்வையிட்டால் உணர முடியும்,'' என்றார்.



ஆய்வு அவசியம்

கூடலுார் மக்கள் இயக்கம் செயலாளர் ரஞ்சித் கூறுகையில், ''பழங்குடியினர் மேம்பாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள், ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வருகின்றன. எனினும் பல கிராமங்களில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.அரசின் இலவச வீடு திட்டத்தின் மூலம், பல கிராமங்களில் கட்டப்பட்ட வீடுகள் முழுமை பெறாமல் உள்ளது. பழங்குடியினர் தொடர்ந்து குடிசைகளில் வசித்து வருகின்றனர். அரசு நிதி ஒதுக்கினாலும், அவர்களின் வாழ்வியல் முறையில் மாற்றங்கள் இல்லை. எனவே, திட்டங்கள் பழங்குடியினருக்கு முழுமையாக சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். திட்டங்களை பெயரளவில் செயல்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.



கல்வியில் ஆர்வம் காட்டுவதில்லை

'நாவா' சைல்டு பண்ட் ஒருங்கிணைப்பாளர் விஜயா கூறுகையில், ''கூடலுார், பந்தலுார் பகுதிகளில் பழங்குடி மாணவர்கள் இடையே, பள்ளி இடைநிற்றல் அதிகரித்துள்ளது. கல்வி குறித்து விழிப்புணர்வு அவரிடம் இல்லை. அரசு அதிகாரிகள் ஒத்துழைப்புடன், நாங்கள் அவர்கள் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு சென்று பள்ளி இடைநின்ற மாணவர்களையும், பெற்றோரை சந்தித்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கி, மாணவரை பள்ளியில் சேர்க்க முயற்சித்து வருகிறோம். சிலர் அதனை ஏற்று படிப்பை தொடர்ந்து உள்ளனர். பெரும்பாலானவர்கள் கல்வியின் மீது ஆர்வம் கட்டுவதில்லை,'' என்றார்.



புறக்கணிக்கும் அதிகாரிகள்

சமூக ஆர்வலர் அரசு கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை பழங்குடியினருக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அரசு தெரிவிக்கிறது. துறை சார்ந்த அதிகாரிகள் அந்த திட்டங்கள் குறித்து பழங்குடியினர் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த அக்கறை காட்டாததால் திட்டங்கள் முறையாக சென்று சேருவதில்லை. பெரும்பாலான பழங்குடியின கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் தரமற்றவையாக உள்ளன. குறிப்பாக, நடைபாதை, 'ஜல் ஜீவன்' திட்டத்தில் வீடு, வீடாக குடிநீர் வசதி ஏற்படுத்தியும், தண்ணீர் வராததால், அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் அவலம் தொடர்கிறது. திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அள்ளி கொடுத்தும், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை,''என்றார்.



வீடு முற்றத்தில் சமையல் நடக்குது

கோத்தகிரி அருகே, அணில்காடு குரும்பர் பழங்குடியின கிராம, ஊர் தலைவர் ஆலம்மா கூறுகையில்,''எங்கள் கிராமத்தில், 10 குடும்பங்கள் மிகவும் சேதம் அடைந்த வீடுகளில் வாழ்ந்து வருகின்றன. பல வீடுகளில் சமையலறை இல்லாமல், வீடு முற்றத்தில் சமையல் நடக்கிறது. அரசு சார்பில், சிறிய தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வந்தாலும் முழுமை பெறாமல் உள்ளது. சமீபத்தில், மின் கம்பங்கள் அமைத்து, மின்வசதி ஏற்படுத்தி இருந்தாலும், தெருவிளக்குகள் பொருத்தப்படவில்லை. சரியான நடைபாதை வசதிக்கூட இல்லை. கரடி, சிறுத்தை, காட்டுப்பன்றி மற்றும் காட்டெருமை வீடு வாசலுக்கு வருவது அதிகரித்துள்ளது. இருள் காரணமாக, மாலை, 6:00 மணிக்கு மேல் வெளியே செல்வதை தவிர்த்து வருகிறோம். தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்ல முடியாமல் ஒத்தையடி பாதையை பயன்படுத்தி வருகிறாம். பல முறை, ஊராட்சி நிர்வாகம், கலெக்டருக்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அடிப்படை வசதிகள் முழுமை பெறாமல் உள்ளது,'' என்றார்.



-நிருபர் குழு-






      Dinamalar
      Follow us