மின்சார ஒழுங்குமுறை ஆணைய பதவி விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு ஏன்?
மின்சார ஒழுங்குமுறை ஆணைய பதவி விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு ஏன்?
ADDED : செப் 19, 2024 10:58 PM
சென்னை:தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு தகுதியான நபரை நியமனம் செய்ய, விண்ணப்பம் பெறுவதற்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது, வேண்டியவர்களை நியமிக்க தாமதம் செய்யப்படுகிறதா என, சமூக ஆர்வர்லகள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
ஆணைய தலைவராக இருந்த சந்திரசேகர் ஆகஸ்ட், 14ல் ஓய்வு பெற்றதை அடுத்து, அப்பதவி காலியாக உள்ளது. அதற்கு ஒரு மாதம் முன்பே, இப்பதவிக்கு தகுதியான நபரை தேர்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில், தலைமை செயலர், மத்திய மின்சார ஆணைய தலைவர் அடங்கிய தேர்வு குழுவை அரசு நியமித்தது.
கடந்த ஜூலை 15ல் நடந்த தேர்வு குழு கூட்டத்தில், தலைவர் பதவியை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறவும், அம்மாதம் 31ம் தேதி மாலை வரை அவகாசம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
பின், விண்ணப்பம் வழங்குவதற்கான அவகாசம், படிப்படியாக, இம்மாதம் 16ம் தேதி மாலை, 6:00 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
இதுவரை, 200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், மீண்டும் அக்டோபர் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் டி.சடகோபன் கூறுகையில், “எப்போதும் இல்லாத வகையில், விண்ணப்பம் அளிப்பதற்கான அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. வேண்டிய நபரை நியமிக்க, வேண்டுமென்றே தாமதம் செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது,” என்றார்.