தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சேலம் குடிநீர் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஏன்?

 சேலம் குடிநீர் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஏன்?

 சேலம் குடிநீர் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஏன்?


ADDED : ஜூலை 14, 2026 04:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 04:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சேலம் மாநகராட்சி குடிநீர் திட்டத்திற்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட, 758 கோடி ரூபாயுடன் கூடுதலாக, 277 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகராட்சியில், 10.83 லட்சம் பேர் பயன் பெறும் வகையில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்க, தி.மு.க., ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 758 கோடி ரூபாய் செலவில் பணிகளை மேற்கொள்ள, 2024 மார்ச் 6ம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வாயிலாக அனுமதி வழங்கப்பட்டது.

அனுமதி இப்பணியை மேற்கொள்வதற்கு, 'சூயஸ் பிராஜக்ட் இன்டர்நேஷனல்' என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த பிப்ரவரி 9ம் தேதி அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், சேலம் மாநகராட்சியில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள, 758 கோடி ரூபாயுடன் கூடுதலாக, 277 கோடி ரூபாய் சேர்த்து, 1,035 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதற்கான ஒப்பந்தம், கடந்த ஜூன் 19ம் தேதி கையெழுத்தாகியுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் பணிகளை முடித்து, திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை தொடர்ந்து, 25 ஆண்டுகள் பராமரிப்பதற்காக, ஒப்பந்த நிறுவனத்திற்கு தொடர் பராமரிப்பு செலவாக, 3,250 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தி.மு.க., ஆட்சியில் போடப்பட்ட பெரிய தொகைகள் கொண்ட, 'டெண்டர்'கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சேலம் மாநகராட்சி குடிநீர் திட்டத்திற்கான டெண்டர் ரத்து செய்யப்படவில்லை.

இத்திட்டத்திற்கு கூடுதலாக, 277 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு செலவிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஒப்புதல் இத்திட்டத்திற்கு, 2022ம் ஆண்டு, 758 கோடி ரூபாய்க்கு தோராய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, நிதித்துறை ஒப்புதல் பெறும்போது, திட்ட மதிப்பீடு தொகை, 1,035 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதை முதல்வர் விஜயிடம் எடுத்துக் கூறி, கூடுதல் நிதிக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், புதிய குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

இதற்காக, 1,200 கி.மீ.,க்கு அமைக்கவிருந்த குடிநீர் குழாய்களை, 1,400 கி.மீ.,க்கு அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என, தி.மு.க., ஆட்சியிலேயே கேட்கப்பட்டது.

சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானதால், நிதி ஒதுக்க முடியவில்லை. தற்போது, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us