டிஜிட்டல் பண வசூல் குறைவாக இருப்பது ஏன்? 'டாஸ்மாக்' ஊழியர்களுக்கு மேலாளர்கள் நோட்டீஸ்
டிஜிட்டல் பண வசூல் குறைவாக இருப்பது ஏன்? 'டாஸ்மாக்' ஊழியர்களுக்கு மேலாளர்கள் நோட்டீஸ்
UPDATED : ஜூன் 29, 2025 04:18 AM
ADDED : ஜூன் 28, 2025 07:10 PM

சென்னை:தினமும், 15 சதவீதத்துக்கும் குறைவாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை உள்ள மதுக்கடை ஊழியர்களிடம், 'உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது' என, விளக்கம் கேட்டு, 'டாஸ்மாக்' மாவட்ட மேலாளர்கள், 'நோட்டீஸ்' அனுப்பி வருகின்றனர்.
அறிவுறுத்தல்
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. மதுக்கடை ஊழியர்கள், அரசு நிர்ணயித்திருக்கும் விலையை விட, பாட்டிலுக்கு 30 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கின்றனர்.
அதனால், மதுபான ஆலை முதல் மதுக்கடையில், 'குடி'மகன்களிடம் விற்பது வரை அனைத்து செயல்பாட்டையும், டாஸ்மாக் நிர்வாகம் கணினிமயமாக்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மதுக்கடையில் இருந்து ஒவ்வொரு மது பாட்டிலையும் மொபைல் போன் வடிவிலான கருவியில், 'ஸ்கேன்' செய்து தான் விற்க முடியும். 'குடி'மகன்கள் ரொக்கம் மட்டுமின்றி, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது.
கூடுதலாக பணம் வசூலிப்பதை தடுக்க, தினசரி மொத்த விற்பனையில், டிஜிட்டல் பரிவர்த்தனை, மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில், குறைந்தது 50 சதவீதம், மற்ற பகுதிகளில் 25 சதவீதம் இருக்க வேண்டும் என, கடை ஊழியர்களை டாஸ்மாக் அறிவுறுத்தி உள்ளது. ஆனால், பல கடை ஊழியர்கள் இதை பின்பற்றுவதில்லை.
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மதுக்கடைகளில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க, டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படுகிறது. எனவே, தினமும் 15 சதவீதத்திற்கு கீழ் டிஜிட்டல் பரிவர்த்தனை உள்ள கடை ஊழியர்களுக்கு, 'டிஜிட்டல் பரிவர்த்தனை குறைவாக இருப்பதால், நீங்கள் சிறப்பாக பணிபுரியவில்லை என்று தெரிகிறது.
'நோட்டீஸ்'
இது தொடர்பாக, உங்கள் மீது துறை ரீதியாக, ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது. மூன்று நாட்களுக்குள் நேரில் உரிய விளக்கம் அளிக்கவும்' என, மாவட்ட மேலாளர்கள், 'நோட்டீஸ்' அனுப்புகின்றனர்.
அவர்கள் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து, முதல்முறை எச்சரித்து அனுப்பப்படும். மீண்டும் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.