ADDED : ஜூன் 19, 2024 05:21 PM

தஞ்சாவூர்: ‛‛ கடந்த 2021ல் பொதுவாழ்வில் இருந்து விலகிக்கொள்வதாக கூறிய சசிகலா இப்போது ஏன் வருகிறார்?'' என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பி உள்ளார்.
தஞ்சாவூரில் நிருபர்களிடம் இ.பி.எஸ்., கூறியதாவது: மேட்டூர் அணையில் இருந்து உரிய நாளில் தண்ணீர் திறக்கப்படாததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வறட்சி மற்றும் மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். திமுக ஆட்சியில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்டனம்
மத்திய ஜல்சக்தி துறை அமைச்சராக கர்நாடகாவைச் சேர்ந்தவரை நியமித்தது கண்டிக்கத்தக்கது. மேகதாதுவில் அணை கட்டுவோம் என ஜல்சக்தி துறை இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. நீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் போராடுவதால் பலன் இல்லை. இந்த தேர்வை ஒழிக்க 40 எம்.பி.,க்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். ரத்து செய்ய பாடுபட வேண்டும்.
தேவையில்லாதது
இத்தனை ஆண்டுகாலம் அதிமுக.,வை காப்பாற்றியது யார்? அரசியல் ரீ என்ட்ரி என்பது விடுமுறை முடிந்து வேலைக்கு செல்வது போன்றதா?கடந்த 2021ல் பொதுவாழ்வில் இருந்து விலகிக்கொள்வதாக கூறிய சசிகலா இப்போது ஏன் வருகிறார்? இத்தனை நாள் கட்சியை காப்பாற்றியது யார்; தொண்டர்கள் தான்! அதிமுக.,வில் யாரும் சாதி பார்ப்பது கிடையாது. சசிகலாவின் கருத்து தேவையற்றது. ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளே தற்போதும் தொடர்கின்றனர்.
மக்கள் தண்டனை
இரட்டை இலைக்கு எதிராக போட்டியிட்டவர் ஓ. பன்னீர்செல்வம். பலாப்பழத்தை வைத்து மத்திய அமைச்சராக முயற்சி செய்தார். எந்த காலத்திலும் அவர் யாருக்கும் விஸ்வாசமாக இருந்தது கிடையாது. அனைத்திலும் சுயநலம். மக்கள் அவருக்கு சரியான தண்டனை வழங்கி உள்ளனர். அவரை எப்படி தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.