தேர்தல் கமிஷன் அறிவிப்பால் ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார்: பா.ஜ.,
தேர்தல் கமிஷன் அறிவிப்பால் ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார்: பா.ஜ.,
ADDED : அக் 28, 2025 05:48 PM

சென்னை:
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில்
கூறியுள்ளதாவது: தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் உள்ள போலி வாக்காளர்களைக்
களைந்து, தேர்தல் கமிஷன் துணிவான சிறந்த முயற்சியால் டிச.9ல் உண்மை
வாக்காளர்களைக் கொண்ட வரைவுப் பட்டியல் வெளியிட உள்ளது. தமிழக வாக்காளர்
பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (S.I.R) நவம்பர் 4 முதல் டிசம்பர் 4
வரை நடைபெறும் என்னும் தேர்தல் கமிஷனின் அறிவிப்புக்கு எதிர்ப்பு
தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் வரும் நவம்பர் 2ம் தேதி அனைத்து கட்சி
கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
வாக்குப் பறிப்பை
தடுப்போம். வாக்குத் திருட்டை முறியடிப்போம். தேர்தல் கமிஷனின் ஜனநாயக
படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும் என்று தன்னுடைய சமூக வலைதளப்
பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தான்
போட்டியிட்டு வென்ற கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்காளர்கள்
சந்தேகத்துக்குரியவர்களாக இருப்பதாக பா.ஜ., எம்.பி அனுராக் தாக்கூர்
கூறிய குற்றச்சாட்டுக்கு இதுவரை நேரடியாக பதில் அளிக்காதது ஏன்?
தமிழகம்
முழுவதும் உள்ள தொகுதிகளில் தி.மு.க. சேர்த்துள்ள போலி வாக்காளர்களை
தேர்தல் கமிஷன் நீக்கி விடுமோ? என்ற அச்சம் தி.மு.க.வினருக்கும் கூட்டணி
கட்சியினருக்கும் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. சேர்த்துள்ள இரண்டரை கோடி
புதிய வாக்காளர்களில் உள்ள போலி வாக்காளர்களைக் கண்டுபிடிக்க, தேர்தல்
கமிஷன் எடுக்கும் முயற்சிகளை தடுக்கும் வகையில், தி.மு.க. காங்கிரஸ்
உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நேற்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில்
நடத்திய அவசர கூட்டத்தில், தேர்தல் கமிஷனுக்கு கண்டனத்தையும் பா.ஜ., மீது
அவதூறு பிரசாரத்தையும் துவக்கி உள்ளன.
மறைந்த நேரு பிரதமராக இருந்த
காலத்தில் துவங்கி, ஆண்டாண்டு காலமாக நடக்கும் வழக்கமான வாக்காளர் பட்டியல்
சிறப்புத் திருத்தப் பணி (SIR) நடைமுறையை ஏதோ புதிய முறை போல
காட்சிப்படுத்தி அவதூறு பரப்புவதின் உள்நோக்கம் என்ன? ஸ்டாலின் தேர்தல்
கமிஷனின் அறிவிப்பைக் கண்டு ஏன் பயப்படுகிறார்?. இவ்வாறு அதில்
கூறியுள்ளார்.

