நகர்ப்புற வாழ்விட வாரியத்தில் 12,000 வீடுகள் தேக்கம் ஏன்?
நகர்ப்புற வாழ்விட வாரியத்தில் 12,000 வீடுகள் தேக்கம் ஏன்?
ADDED : அக் 29, 2024 04:07 AM
சென்னை : நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட பகுதிகளில், கட்டுமான பணிகள் முடிந்து, 12,000 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன.
மத்திய, மாநில அரசுகள் மற்றும் உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் நிதியுதவியில், வீட்டுவசதி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், பெரும்பாலான திட்டங்கள், ஆட்சேபகரமான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
திட்டங்கள் செயல்படுத்தப்படும் போதே, ஒதுக்கீட்டாளர்கள் உறுதி செய்யப்படுவதால், வீடு ஒப்படைப்பில் பிரச்னை ஏற்படுவதில்லை.
அதேநேரம், கூடுதல் எண்ணிக்கையில் கட்டப்படும் வீடுகளை, தகுதி உடைய மக்களுக்கு மானிய விலையில் நேரடியாக விற்க, வாரியத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, 12,000 வீடுகள் குறித்த விபரங்கள், வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து, வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பல்வேறு திட்ட பகுதிகளில், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் விற்பனையில், தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதில், கட்டுமான பணிகளுக்கான, 'டெண்டர்' தயாரிப்பு, கட்டுமான பணிகள் கண்காணிப்பு, வீடு விற்பனை, ஒதுக்கீடு ஆகிய பணிகள், செயற்பொறியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வாரியத்தில் தற்போது, கண்காணிப்பு பொறியாளர் பதவிகளும், நிர்வாக செயற் பொறியாளர்களில், 28 பணியிடங்களும் காலியாக உள்ளன. அவர்களுக்கான பணிகள், கூடுதல் பொறுப்பாக வேறு அதிகாரிகளிடம் தரப்பட்டுள்ளன.
முழுநேர அதிகாரிகள் இல்லாத நிலையில், பல்வேறு விஷயங்களில் முடிவுகள் எடுக்க, பொறுப்பு அதிகாரிகள் தயங்குகின்றனர். இந்த பணியிடங்களை நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் கட்டி முடித்த வீடுகள், உரியவர்களுக்கு சென்று சேரும்.
இவ்வாறு அவர் கூறினார்.